தென் ஆஸ்திரேலியாவின் செம்பு உற்பத்தியை இரட்டிப்பாக்க US$17.4 பில்லியன் திட்டம் அறிவிப்பு

தென் ஆஸ்திரேலியாவின் செம்பு உற்பத்தியை இரட்டிப்பாக்க US$17.4 பில்லியன் திட்டம் அறிவிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

23 Nov 2026 - 6:32 pm

1 mins read

மெல்பர்ன்: உலகின் முன்னணிச் சுரங்க நிறுவனமான ‘பிஎச்பி’ (BHP) 2040ஆம் ஆண்டுக்குள் தென் ஆஸ்திரேலியாவின் செம்பு உற்பத்தியை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் திங்கட்கிழமை (நவம்பர் 23) தெரிவித்துள்ளது.

மின்மயமாக்கலுக்கு முக்கிய உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படும் செம்பில் அது முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அது குறித்த இறுதி முதலீட்டு முடிவு, 2027ஆம் ஆண்டின் முதற்பாதியில் எடுக்கப்படவுள்ளது.

ஆண்டுக்குச் செம்பு உற்பத்தியைக் கிட்டத்தட்ட 650,000 டன்னாக உயர்த்த 13.6 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 17.4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவிட பிஎச்பி திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம், அதன் முக்கிய ‘ஒலிம்பிக் டேம்’ செம்புச் சுரங்கம், ‘அங்காட்டா’ (Ankata) செம்புச் சுரங்கம், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்ட ‘காப்பர் சவுத் ஆஸ்திரேலியா’ (Copper South Australia) செயல்பாடுகளை ஒன்றிணைக்கிறது. 2023ஆம் ஆண்டில் 9.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கு ‘ஆஸி மினரல்ஸ்’ (OZ Minerals) நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அந்தச் சுரங்கங்கள் கிடைத்தன.

“உலகின் மிகப் பெரிய செம்பு உற்பத்தியாளர் என்ற வலுவான நிலையிலிருந்தும் தற்போதைய செம்பு வருவாயிலிருந்து நிதியளிக்கக்கூடிய, துறையின் முன்னணி வளர்ச்சிப் பாதையுடனும் நாங்கள் தொடங்குகிறோம்,” என்று பிஎச்பி நிறுவனத்தின் ஆஸ்திரேலியச் செயல்பாடுகளின் தலைவர் ஜெரல்டின் ஸ்லாட்டரி முதலீட்டாளர்களிடம் தெரிவித்ததாக பிஎச்பி வெளியிட்ட குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

“இந்த வளர்ச்சியின் மையப்புள்ளியாக ‘காப்பர் சவுத் ஆஸ்திரேலியா’ திகழ்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்