சூரிய மின்பலகைகளில் குங்குமப்பூ விளைச்சல்: $77,000க்கும் மேல் வருவாய்

கொலராடோ மாநில ஆய்வாளர்களின் கணிப்பு

சூரிய மின்பலகைகளில் குங்குமப்பூ விளைச்சல்: $77,000க்கும் மேல் வருவாய்

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

25 Sep 2026 - 6:43 pm

2 mins read

டென்வர்: கட்டடங்களின் மொட்டை மாடிகளில் சூரிய மின்பலகைகளை அமைத்து மின்சாரம் தயாரிப்பதுடன், உலகின் மிக விலையுயர்ந்த குங்குமப்பூப் பயிரையும் விளைவித்துக் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்பதை அமெரிக்காவின் கொலராடோ மாநில ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொலராடோ மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், 40 விழுக்காடு ஒளி ஊடுருவும் சூரிய மின்பலகைகளின் கீழ் வளர்க்கப்பட்ட குங்குமப்பூச் செடிகள், நிழலில்லாத சாதாரண நிலப்பரப்பைவிட இருமடங்கு அதிகமான பூக்களையும், விளைச்சலையும் தந்தது.

வடிகால் வசதி, ஊட்டச்சத்து குறைந்த மண், மாறுபட்ட வெப்பநிலை கொண்ட மொட்டை மாடிச் சூழல், குங்குமப்பூ விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. வேளாண்மையையும் சூரியஒளி மின் உற்பத்தியையும் இணைக்கும் ‘அக்ரிவோல்டாயிக்ஸ்’ தொழில்நுட்பத்திற்கு இது பெரு நல்வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

2026 மார்ச் மாத ஆய்வறிக்கையில், ஜெனிஃபர் பூசெலாட் தலைமையிலான குழுவினர், பயிர்களுக்கு மேல் 6 முதல் 8 அடி உயரத்தில் 30 முதல் 40 விழுக்காடு ஒளி ஊடுருவும் பலகைகளைப் பொருத்த பரிந்துரைக்கின்றனர். அளவுக்கு அதிகமான நிழல் மகசூலைப் பாதிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர்.

அதேவேளையில், 2022ல் மொரோக்கோவில் நடத்தப்பட்ட ஆய்வில் 30 விழுக்காடு நிழல் தருமாறு (70 விழுக்காடு சூரியஒளி) அமைக்கப்பட்ட சூழலில் அதிக விளைச்சல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

4,356 சதுர அடி பரப்பளவைக் கொண்ட மொட்டை மாடியில், 46 கிலோவாட் சூரியஒளித் தொகுதியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஐந்து ஆண்டு மாதிரி ஆய்வில், மின்சாரம், குங்குமப்பூ, அதன் கிழங்கு விற்பனை மூலம் S$77,932 (US$61,000) நிகர வருமானம் ஈட்ட முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

குங்குமப்பூச் செடியின் உலர்ந்த சிவப்பு மகரந்த நரம்புகளே பயன்படுத்தப்படுவதால், கைமுறை அறுவடைக்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு கிராம் உலர்ந்த குங்குமப்பூவைப் பெற 159 முதல் 179 பூக்கள் தேவைப்படுகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுவதால், இது விவசாயிகளுக்குக் கூடுதல் பருவகால வருமானத்தைத் தரும்.

நகர்ப்புறங்களில் மொட்டை மாடி விவசாயம் வெப்பத்தைக் குறைப்பதுடன், பாசனத் தேவைகளையும் குறைக்கிறது. எனினும், முறையான பராமரிப்பும் திறமையான திட்டமிடலும் இருந்தால் மட்டுமே இத்தகைய மாடித் திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் வெற்றிகரமாகச் செயல்பட முடியும்.

குறிப்புச் சொற்கள்