வாஷிங்டன்: அமெரிக்காவின் அணுமின் துறையை விரைவுபடுத்தும் நோக்கில், US$2.2 பில்லியன் (S$2.8 பில்லியன்) செலவில் ஐந்து ராணுவப் படைத்தளங்களுக்குச் சிறிய ரக அணுவுலைகளை அமைக்க அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டுள்ளது.
‘ஜானஸ்’ திட்டத்தின்கீழ், ஐந்து வெவ்வேறு இடங்களில் பணிகளை மேற்கொள்வதற்காக ஐந்து நிறுவனங்களை ராணுவம் தேர்வு செய்துள்ளது என்று புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கரோலினாவில் ஃபோர்ட் பிராக், ஜார்ஜியாவில் ஃபோர்ட் பென்னிங், நியூயார்க்கில் ஃபோர்ட் டிரம், கென்டக்கியில் ஃபோர்ட் கேம்ப்பெல், டெக்சஸில் ஃபோர்ட் ஹூட் ஆகியவற்றில் அந்த நிறுவனங்கள் அணுவுலைகளை அமைக்கும் என்று கூறப்பட்டது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 20க்கும் மேற்பட்ட அணுவுலைகளை நிறுவவும் 2028 செப்டம்பர் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் ஓர் அணுவுலையையாவது செயல்பாட்டிற்குக்கொண்டு வரவும் இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
நாட்டில் பல்லாண்டுகளாகத் தேக்கமடைந்துள்ள அணுமின் உற்பத்தித் திறனை 2050ஆம் ஆண்டுக்குள் நான்கு மடங்காக உயர்த்த வெள்ளை மாளிகை இலக்கு நிர்ணயித்துள்ளது. எதிரிகளின் சவால்களிலிருந்து மின்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் உள்நாட்டு அணுமின் துறையை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும் என்று கருதப்படுகிறது.
இருப்பினும், புதிய தொழில்நுட்ப வடிவமைப்புகள் மற்றும் அனுபவமற்ற விநியோகஸ்தர்களைச் சார்ந்திருப்பதால், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதில் முட்டுக்கட்டை ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
படைத்தளங்களுக்குத் தேவையான நம்பகமான மின்சாரத்தை வழங்குவதற்காக, 20 மெகாவாட்டிற்கும் குறைவான உற்பத்தித்திறன் கொண்ட சிறிய ரக மைக்ரோ அணுவுலைகளே உருவாக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ராணுவத் தளங்களில் அணுவுலைகளை அமைப்பது, தனியார் நிறுவனங்கள் தங்களின் சிவில் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் அவற்றுக்கான உரிமங்களைப் பெறுவதற்கும் உதவும் என்று கருதப்படுகிறது.


