இஸ்ரேல் லெபனான் சண்டைநிறுத்தம் 45 நாள்கள் நீட்டிப்பு: அமெரிக்கா

இஸ்ரேல் லெபனான் சண்டைநிறுத்தம் 45 நாள்கள் நீட்டிப்பு: அமெரிக்கா

1 mins read
நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை தொடரும்: அமெரிக்கா
e261397b-1daa-4eb6-b1f6-ecca70d1747f
தென்பெய்ரூட்டில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த வாகனம். - படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: இஸ்ரேலும் லெபனானும் நடப்பில் இருக்கும் தற்காலிகச் சண்டைநிறுத்தத்தை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்து இருநாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா சனிக்கிழமை (மே 16) தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (மே 17) முடிவடைய இருந்த தற்காலிகச் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து விவாதிக்க, இஸ்ரேல், லெபனான் அதிகாரிகள் வாஷிங்டனில் கடந்த இரண்டு நாள்கள் தீவிரப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இதற்கிடையே, சண்டைநிறுத்தத்தை மீறுவதாகாது என்று கூறி, ஹிஸ்புல்லா அமைப்பின் போராளிகளை இஸ்ரேல் தென் லெபனானில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. ஹிஸ்புல்லா முதலில் தாக்கியதால் அந்தப் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறியது.

மேலும், சண்டைநிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் ஆதரவோடு செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு பிரதிநிதிக்கப்படாததால், அது இஸ்ரேலுக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

லெபனான் அரசாங்கம் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடிவருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சு சண்டைநிறுத்த நீட்டிப்பை அறிவித்ததோடு, இருநாட்டு ராணுவ அதிகாரிகளை மே 29ஆம் தேதி வாஷிங்டனுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இஸ்ரேல், லெபனான் பூசலுக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசியல் தலைவர்களின் சந்திப்பு ஜூன் 2, 3ஆம் தேதிகளில் இடம்பெறும் என்ற விவரங்களை அமைச்சின் பேச்சாளர் டாமி பிகொட் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்