ஒலிம்பிக் வெற்றியாளர் கணக்கிலிருந்து US$12 மில்லியன் மாயம்

ஒலிம்பிக் வெற்றியாளர் கணக்கிலிருந்து US$12 மில்லியன் மாயம்

1 mins read
b5124a6b-81f5-4317-a625-1801d746ccd2
மோசடிக்கு இலக்கான தொகையை மீட்டெடுக்க போல்ட் முற்படுகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

கிங்ஸ்டன், ஜமைக்கா: ஒலிம்பிக் வெற்றியாளரான ஜமைக்காவின் உசேன் போல்ட், அந்நாட்டின் முதலீட்டு நிறுவனத்தின் மோசடியால் தமது கணக்கிலிருந்து US12.7 மில்லியனை (S$16.8 மில்லியன்) இழந்துள்ளார்.

கிங்ஸ்டனின் 'ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட்டில் (எஸ்எஸ்எல்) அவரது கணக்கில் உள்ள தொகை US$12,000ஆக குறைந்தது. மோசடிக்கு இலக்கான தொகையை மீட்டெடுக்க போல்ட் முயல்வதாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தயாராக இருப்பதாகவும் அவருடைய வழக்கறிஞர் லிண்டன் கோர்டன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 17) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

எட்டு முறை ஒலிம்பிக் வெற்றியாளரான போல்ட்டுக்கும் அவருடைய பெற்றொருக்கும் அந்த சேமிப்புத் தொகை ஓய்வூதியமாக பயன்படுத்தப்படவிருந்தது.

"போல்ட்டிற்கு நடந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயல். மோசடி செய்த நிறுவனம் அவரிடம் நிதியைத் திருப்பித் தராவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும் போல்ட் தமது பணத்தை மீட்டு நிம்மதியாக வாழக்கூடிய வகையில் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்று கோர்டன் உறுதி கூறினார்.

இதற்கிடையே, எஸ்எஸ்எல் நிறுவனத்தின் மோசடியில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிக்கு பதில் கூறவேண்டும் என்று ஜமைக்கா நிதி அமைச்சர் நைஜல் கிளார்க் கூறியுள்ளார்.

100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த போல்ட், உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக கருதப்படுகிறார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டப்பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த போல்ட், 2017ல் தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.