புத்ராஜெயா: சிறுவர்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது அவர்கள் பாதுகாப்பாக இருக்க சிறார் இருக்கையைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் விடாப்பிடியாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புக்கிட் காஜாங் சாலைக் கட்டணச் சாவடியில் நிகழ்ந்த விபத்தில் 12 மாத ஆண் குழந்தை மரணமடைந்தது.
மாண்ட குழந்தையின் பெயர் அமீர் உசேன் என்று தெரிவிக்கப்பட்டது.
லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. கார் மீது வாகனம் மோதியதில் அந்தக் குழந்தை காரிலிருந்து தூக்கி எறியப்பட்டது.
விபத்துக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் 42 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. லாரியின் பிரேக் செயலிழந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சிறார் இருக்கை பயன்படுத்தப்பட்டிருந்தால் குழந்தையின் இறப்பைத் தவிர்த்திருக்கலாம் என்று திரு லோக் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரது கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இருப்பினும், தமது கருத்திலிருந்து அமைச்சர் லோக் பின்வாங்கவில்லை. சிறார் இருக்கையின் முக்கியத்துவத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“அமைச்சர்கள் என்கிற முறையில் நாங்கள் என்ன செய்தாலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பரவாயில்லை. அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். மக்கள் என்னைத் திட்டினால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று மக்களுக்கு நினைவூட்டுவது என் கடமை. இந்தக் கடமையை ஆற்றுவதில் உறுதியாக இருக்கிறேன்,” என்று அமைச்சர் லோக் தெரிவித்தார்.
வாகனங்களில் பயணம் செய்யும் சிறுவர்களின் உயிரைக் காக்கக்கூடிய சிறார் இருக்கைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பெற்றோருக்கு ஏற்படுத்தும் முயற்சிகளைத் தமது அமைச்சு தீவிரப்படுத்தும் என்று அவர் கூறினார்.