பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தையும் நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்

மலேசியர்களுக்குத் துணைப் பிரதமர் அறிவுறுத்து

பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தையும் நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்

படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2026 - 5:12 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியர்கள் தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென அந்நாட்டின் எரிசக்தி, நீர்வளத் துறை அமைச்சர் ஃபடில்லா யூசோஃப் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கமாக, நோன்புப் பெருநாள் காலத்தில் நீர், மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும்.

“பண்டிகைக் காலத்தில் வீடுகளில் மின்சாரப் பயன்பாடு 20 முதல் 40 விழுக்காடு வரை அதிகமாக இருக்கும்.

“பயன்படுத்தாதபோது விளக்கு, மின்கருவிகளை அணைத்து வைப்பது, குளிரூட்டி வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருப்பது, நான்கு அல்லது ஐந்து நட்சத்திர எரிசக்தித் திறன் தரநிலை மின்கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற வழிகளில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கலாம்,” என்று திரு ஃபடில்லா அறிவுறுத்தினார்.

பண்டிகைக்காக மக்கள் வீடு திரும்பியபின் வீடுகளில் தண்ணீர்ப் பயன்பாடும் 30 முதல் 35 விழுக்காடுவரை அதிகரிப்பது வழக்கம் என்று துணைப் பிரதமருமான திரு ஃபடில்லா குறிப்பிட்டார்.

“தங்களால் முடிந்த அளவிற்கு நீர்த் தேவை நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய நீர் விநியோக நிறுவனங்கள் தயாராக உள்ளன,” என்றார் அவர்.

தற்போது ஒருநாளைக்கு ஒருவர் 160 லிட்டர் வரையிலும் நீரைச் செலவழிப்பதாக அவர் சொன்னார்.

வீடுகளில் நீர்க்கசிவு இருந்தால் உடனடியாக அதனைச் சரிசெய்யுமாறு வலியுறுத்திய துணைப் பிரதமர், மரங்களுக்கு நீர் ஊற்றுவது, தோட்டத்தைச் சுத்தம் செய்வது அல்லது வாகனங்களைக் கழுவுவது போன்ற பணிகளுக்கு மழைநீர் போன்ற மாற்றுவளங்களைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

நீரைப் பயன்படுத்துவதில் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

சிறிதெனினும் செயல்திறன்மிக்க நடைமுறைகளால் பணத்தைச் சேமிக்க முடியும் என்றும் அதன்மூலம் நிலைத்தன்மைமிக்க பயன்பாட்டிற்குப் பங்களிக்க முடியும் என்றும் திரு ஃபடில்லா குறிப்பிட்டார்.

மின்பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

“மாதத்தில் குறைந்தது ஒருமுறையேனும் வீடுகளில் மின்னிணைப்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அது முறையாக வேலை செய்யாவிடில், மின்சுற்று துண்டிக்கப்பட்டு, மின்விநியோகம் தடைபடலாம்,” என்று அவர் விளக்கினார்.

‘எஸ்டி-சிரிம்’ (ST-SIRIM) பாதுகாப்பு முத்திரையுடன் கூடிய அலங்கார விளக்குகளையும் மின்கருவிகளையும் பயன்படுத்துமாறும் துணைப் பிரதமர் ஃபடில்லா கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்