ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு, விமானங்களில் பயணம் செய்வோர் மின்னூட்டக் கருவிகளை விமானச் சிப்பந்திகள் பார்க்கும் வகையில் பயன்படுத்தவேண்டும் என்றும் தலைக்குமேல் பெட்டிகள் வைக்கும் பகுதியில் அவற்றை வைக்கக்கூடாது என்றும் அறிவித்துள்ளது.
ஜூலை 8ஆம் தேதியிலிருந்து, ஜப்பானைத் தளமாகக் கொண்ட 23 விமான நிறுவனங்கள் விமானச் சிப்பந்திகளின் பார்வையின்கீழ் மின்னூட்டக் கருவிகள் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று ‘த அஸாஹி ஷிம்புன்’ ஊடகம் சொன்னது.
அதாவது, விமானச் சிப்பந்திகள் கண்காணிக்கக்கூடிய சூழலில்தான் பயணிகள் தங்கள் மின்னூட்டக் கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என்று ‘த ஜப்பான் டைம்ஸ்’ நாளேடு சொன்னது.
ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு தற்போது மின்னூட்டக் கருவிகளை விமானத்தின் சரக்குப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் பெட்டிகளில் வைக்கத் தடை விதித்துள்ளது.
மணிக்கு 160 வாட்டுக்கும் கூடுதலாக மின்னூட்டம் செய்யக்கூடிய ஆற்றல்கொண்ட மின்னூட்டக் கருவிகள் தடை செய்யப்பட்டுள்ளன. பயணிகள் 100 வாட்டுக்கும் 160 வாட்டுக்கும் இடைப்பட்ட அளவில் மின்னூட்டம் செய்யக்கூடிய கருவிகளை மட்டும்தான் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
மின்னூட்டக் கருவிகளால் விமானங்களில் ஏற்பட்ட தீச்சம்பவங்களை அடுத்து பல விமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 28ஆம் தேதி தென்கொரியாவில் உள்ள பூசான் கிம்ஹே அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த ஏர் புசான் விமானத்தில் தீ மூண்டது. அதில் மூவர் காயமடைந்தனர். அந்த விபத்துக்குக் காரணம் மின்னூட்டக் கருவி என்று தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 24ஆம் தேதி பாத்திக் ஏர் விமானம் தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன் புகையால் நிரம்பியது. அது, எரிந்த ஒரு மின்னூட்டக் கருவியிலிருந்து வந்தது என தெரியவந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அண்மை மாதங்களில் பல்வேறு விமான நிறுவனங்கள் விமானத்துக்குள் மின்னூட்டக் கருவிகள் கொண்டுசெல்வதற்குத் தடை விதித்துள்ளன.
இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்களில் மின்னூட்டக் கருவிகளைக் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டன.

