அமெரிக்க டாலருக்கு நிகரான கொரிய ‘வொன்’ மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான கொரிய ‘வொன்’ மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

2 mins read
38decd15-66db-4724-a43d-173fc889e192
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளைத் தொடர்ந்து விற்பதால், கொரிய நாணயமான ‘வொன்‘ மதிப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. - விளக்கப் படம்: பிக்ஸாபே

சோல்: அனைத்துலகப் பொருளியல் சூழல், அமெரிக்காவின் வலுவான வேலைவாய்ப்புத் தரவுகள் காரணமாக, தென்கொரியாவின் நாணயமான ‘வொன்’ மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 1,560 என்ற அளவைத் தாண்டி பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 

உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்ட 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் கொரிய நாணயம் இந்த அளவுக்கு பலவீனமடைவது இதுவே முதல்முறையாகும்.

சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்ற இரவு நேர வர்த்தகத்தின் போது, ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான கொரிய வொன்னின் மதிப்பு 1,561.5 வரை சரிந்தது. பின்னர் வர்த்தக முடிவில் அது 1,559 வொன் என்ற அளவில் நிலைபெற்றது.

முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் 6 அன்று உலக நிதி நெருக்கடியின்போது டாலருக்கு நிகரான வொன்னின் மதிப்பு 1,597 ஆகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு சரிவை நோக்கி கொரிய நாணயம் நகர்வது ஆசியச் சந்தைகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்

நிதிச் சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தத் தொடர் வீழ்ச்சிக்கு மூன்று முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவில் மே மாதத்திற்கான வேலைவாய்ப்பு நிலவரம் எதிர்பார்த்ததைவிட மிகவும் வலுவாக உள்ளதாகப் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

இதனால், அமெரிக்க மத்திய வங்கி  தனது வட்டி விகிதங்களை மேலும் நீண்ட காலத்திற்கு உயர்வாகவே பராமரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது, உலக அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பை கணிசமாக உயர்த்தியுள்ளது. தென்கொரியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்களது பங்குகளைத் தொடர்ந்து விற்றுவிட்டு முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவது ‘வொன்‘ நாணயத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. 

அவற்றுடன், மத்திய கிழக்கு வட்டாரத்தில் நீடித்து வரும் போர்ப் பதற்றங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியையும் கச்சா எண்ணெய் விலையையும் பாதித்துள்ளதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டாலரை நோக்கி நகர்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

குறிப்புச் சொற்கள்