மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் நிகழ்ந்த வேன் விபத்தில் 12 பேர் மாண்டனர்.
விபத்தின் காரணமாக நான்கு பேர் காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட 120 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து வேன் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து, அருகில் உள்ள வனப்பகுதியில் தீ பரவியது.
இதனால் காட்டுத் தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
விபத்து நிகழ்ந்தபோது வேனில் 16 பேர் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
வேனில் பயணம் செய்தவர்கள் எவ்விடத்தைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் சிலர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிலர் சிகிச்சை பலனின்றி மாண்டனர்.
இதற்கிடையே, காட்டுத் தீ மளமளவெனப் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
இதைக் காட்டும் காணொளியை அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர்.
வனப்பகுதியில் ஏறத்தாழ இரண்டு ஹெக்டர் நிலப்பகுதி சேதமடைந்த பிறகே காட்டுத் தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

