வனுவாட்டுவில் படகு மூழ்கியதில் ஒருவர் மரணம், 30 பேரைக் காணவில்லை

வனுவாட்டுவில் படகு மூழ்கியதில் ஒருவர் மரணம், 30 பேரைக் காணவில்லை

1 mins read
e981570e-1e91-4e1a-94f2-80a5abe0306b
எம்வி மாட்டுய் என்ற படகு மோசமான வானிலையால் கடலில் மூழ்கியது. - படம்: ஃபேஸ்புக்

சிட்னி: வனுவாட்டுவில் படகு ஒன்று மூழ்கியதில் 30 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் ஜோதம் நபாட்டின் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் ஒருவர் மாண்டதையும் அலுவலகம் உறுதிசெய்தது.

ஆஸ்திரேலியாவிற்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 1,750 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனுவாட்டுவில் காணாமற்போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கடலில் மூழ்கிய எம்வி மாட்டுய் என்ற படகில் பயணிகளும் சிப்பந்திகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அம்பே, சான்டோ ஆகிய இரண்டு தீவுகளுக்கும் இடையே பயணம் செய்த படகு, மோசமான வானிலை காரணமாகக் கடலில் மூழ்கியதாக நியூசிலாந்து ஒளிபரப்பு நிறுவனம் ஆர்என்சி தெரிவித்தது.

நடுக்கடலில் தேடல் பணிகள் ஓய்ந்துவிட்டதாகக் கூறிய பிரதமர் அலுவலகம் தென்கிழக்குக் கரையோரத்தில் தேடல் பணிகள் தொடர்வதாகக் குறிப்பிட்டது. உயிருடன் இருப்போரைக் கடுமையான நீரோட்டம் அடித்துச்சென்றிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடுங்காற்றுக்கு இடையே கடல்துறையின் எச்சரிக்கைக்குச் செவிசாய்க்காமல் இருந்ததால் படகு மூழ்கியிருக்கலாம் என்று அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
படகுவிபத்துமரணம்காணவில்லை