பெட்டாலிங் ஜெயா: ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் மின்சிகரெட்டுகள், பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதோடு மட்டுமல்லாமல், அப்புறப்படுத்தப்படும்போது சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தாக மாறக்கூடும்.
பயன்படுத்திய மின்சிகரெட்டுகளைப் பொறுப்பற்ற முறையில் அப்புறப்படுத்துவதால், அவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப்பொருள்கள், லித்தியம் மின்கலன்கள், வேதிப்பொருள்கள் போன்றவை மண்ணையும் தண்ணீரையும் மாசுபடுத்துவதோடு, தீ விபத்து ஏற்படக்கூடிய அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மலேசியாவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்களும் நூறாயிரக்கணக்கான சிறுவர்களும் மின்சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். ஆனால், மின்சிகரெட்டுகள் பயன்படுத்தப்பட்டதும் அவை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
மின்சிகரெட்டுகளைச் சரியாக அப்புறப்படுத்தாதது தீ விபத்து ஏற்படக்கூடிய அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று தீயணைப்பு, மீட்புத் துறைத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் முகம்மது கூறினார்.
2023ல் குப்பைக் கிடங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில், வீட்டுக் கழிவுகளில் 1.15 விழுக்காடு அபாயகரமான கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக, திடக்கழிவு மேலாண்மை, பொதுச் சுத்திகரிப்புக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காலிட் முகம்மது தெரிவித்தார்.
“மின்னணுக் கழிவுகள் 0.83 விழுக்காட்டையும் மீதமுள்ள 0.32 விழுக்காடு மின்கலன்கள், ஏரோசால் டின் மற்றும் பிறவற்றையும் உள்ளடக்கியவை,” என்று அவர் கூறினார்.
திரு காலிட்டை பொறுத்தவரை, குப்பைக் கிடங்குகளில் வீசப்படும் ஐந்து முக்கிய வகைக் கழிவுகள் உணவு, நெகிழி, காகிதம், ஒருமுறை பயன்படுத்தும் டயப்பர்கள், தோட்டக் கழிவுகள் ஆகியவை ஆகும்.
சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை நிபுணர் டாக்டர் தேங் லீ சோங், பெரும்பாலான மின்சிகரெட்டுகள் நெகிழிப் பொருள்களைப் போலவே தோற்றமளிப்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“குப்பைக் கூளங்களில் வீசப்படும்போது, முறையாக மறுசுழற்சி செய்யப்படாமல், அவை குப்பைக் கிடங்குகளில் அல்லது குப்பையை அப்புறப்படுத்தும் இடங்களில் குவிந்துவிடும்,” என்று அவர் கூறினார்.
மேலும், மின்சிகரெட்டுகளில் உள்ள லித்தியம் மின்கலன்கள் எரியக்கூடியவை. அவை வெடிப்புக்குக் காரணமாக அமையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.