கோலாலம்பூர்: போதைப்பொருள் சேர்க்கப்பட்டதாக நம்பப்படும் மின்சிகரெட்டுகள் விற்கப்படுவதை மலேசியக் காவல்துறை முறியடித்துள்ளது.
தலைநகர் கோலாலம்பூரில் ஐந்து நாள்களாக நடத்தப்பட்ட கூட்டு முறியடிப்பு நடவடிக்கையில் அந்த மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மின்சிகரெட்டுகளில் ‘ஸாம்பி டிரக்’ எனவும் அழைக்கப்படும் ஃபியூரனில்ஃபென்டனில் (furanylfentanyl) கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஃபியூரனில்ஃபென்டனில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ஃபென்டனில் வடிவமாகும். மருத்துவச் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஃபென்டனில், அபாயகரமான மருந்துச் சட்டம் 1952இன்கீழ் மலேசியாவில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்தாகும்.
‘ஆப் வேப் 1.0’ எனும் கூட்டு முறியடிப்பு நடிவடிக்கையின்போது சுமார் 18.5 கிலோகிராம் அளவிலான ஃபியூரனில்ஃபென்டனில், மற்ற போதைப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள் சார்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 4.6 மில்லியன் ரிங்கிட் (1.48 மில்லியன் வெள்ளி) என்று மலேசியப் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவின் (என்சிஐடி) இயக்குநர் ஹுசெய்ன் ஓமர் கான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கூட்டு முறியடிப்பு நடவடிக்கை ஏப்ரல் 13லிருந்து 17ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. 1,177 என்சிஐடி அதிகாரிகள், மற்ற அமலாக்க அமைப்புகளைச் சேர்ந்த 2,011 அதிகாரிகள் ஆகியோர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

