மலேசியாவில் காய்கறி விலை சீராகும் என எதிர்பார்ப்பு

2 mins read
779be035-d93d-487c-a9d7-37229214d842
கேமரன் மலையிலிருந்து வரும் காய்கறியின் விலை கடந்த ஜூலை மாதம் சரிந்தது. - படம்: தி ஸ்டார் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வோர்க்

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் கேமரன் மலைப் பகுதியிலிருந்து வரும் காய்கறிகளின் விலை வரும் செப்டம்பர் மாதம் இயல்புநிலைக்குத் திரும்பும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அங்குள்ள விவசாயிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம், கேமரன் மலையில் காய்கறிகளின் விலை சரிந்தது. எனினும், மழைக்காலம் வரும்போது விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலையில் அளவுக்கதிகமான காய்கறி வகைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக தேவைக்கு அதிகமான அளவில் காய்கறி இருந்ததாகவும் கேமரன் மலை காய்கறி விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் லாவ் வெங் சூவ் தெரிவித்தார்.

மலேசியாவில் விளைவிக்கப்படும் காய்கறி வகைகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவை கேமரன் மலையில் வளர்க்கப்படுகின்றன. அங்கு வானிலை, விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் இருந்து வந்துள்ளதாக திரு லாவ் குறிப்பிட்டார். எனினும், கடந்த மூன்று வாரங்களாக மழை பெய்யாமல் இருந்தது கவலை தந்தது என்றும் அவர் சொன்னார்.

நல்ல வேளையாக வானிலை நிலவரம் மேம்பட்டுள்ளது என்றும் அதனால் விவசாயிகள் டீசலில் ஓடும் குழாய்களைக் கொண்டு ஆறுகள், நிலத்தடியிலிருந்து நீரை அகற்ற அவசியம் இருக்காது என்றும் திரு லாவ் விவரித்தார். எல்லா வகை டீசலுக்கும் இருந்த சலுகை விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அதைப் பயன்படுத்துவதற்கான செலவு அதிகரித்துள்ளது.

வானிலை, காய்கறி விளைச்சல் ஆகியவை இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாலும் டீசல் விலை அதிகரிப்பால் போக்குவரத்துக்குச் செலவு கூடியுள்ளது தங்களுக்கு சவாலாக அமைந்துள்ளது என்று விவசாயிகள் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கேமரன் ஹைலண்ட்சில் புதிதாக மலர்ந்த பூக்களின் விலை நிலையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பினாங்கில் உள்ள தோட்டங்கள், விநியோகிப்பாளர்களிடமிருந்து வரும் பூக்களுக்கு அது பொருந்தாது.

குறிப்புச் சொற்கள்