வெயிலில் வாடி வதங்கும் காய்கனிகள்; மலேசிய விவசாயிகள் கவலை

வெயிலில் வாடி வதங்கும் காய்கனிகள்; மலேசிய விவசாயிகள் கவலை

2 mins read
81126507-371a-4a06-97b6-101e99f7acab
சொந்தமாக நீர்த்தேக்க வசதி உள்ள விவசாயிகள் ஓரளவு சமாளிக்க முடிந்தாலும் வெப்ப அலை நீடித்தால் நீர் ஆதாரம் நிலைக்காது என்பதே முக்கியக் கவலையாக உள்ளது. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் தொடரும் கடுமையான வெப்ப அலை அந்நாட்டு விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொளுத்தும் வெயிலால் காய்கறிகளும் பழங்களும் வாடி வதங்குவதால், அவற்றை விளைவிக்கும் விவசாயிகள் பேரிழப்பையும் விளைச்சல் குறைவையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

பயிர்களைக் காக்க அவர்கள் அடிக்கடி நீர் பாய்ச்சுவதுடன் நிழல் வலைகளையும் அமைக்க வேண்டியுள்ளது. அதனால், தண்ணீர், மின்சாரம், எரிபொருள், தொழிலாளர் கூலி ஆகியவற்றிற்காகக் கூடுதல் செலவு ஏற்படுவதாக மலேசியக் காய்கறி விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் லிம் செர் குவீ தெரிவித்தார்.

சில பகுதிகளில் போதிய நீர் கிடைக்காத நிலை நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், நீர்ப் பற்றாக்குறை தொடர்ந்தால் பயிரிடுவதைக் குறைக்க வேண்டும் அல்லது பயிர்களை இழக்க நேரிடும் என்றும் சொன்னார்.

இத்தகைய சூழலில், நீர்ப்பாசன, நீர்த்தேக்க வசதிகளை மேம்படுத்தவும் எரிபொருள், மின்சாரக் கட்டணச் சலுகைகளை வழங்கவும் அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவும் என்று திரு லிம் நம்பிக்கை தெரிவித்தார்.

“உள்ளூர்க் காய்கறி உற்பத்தியானது மலேசியாவின் உணவுப் பாதுகாப்புடன் நேரடித் தொடர்புடையது. மோசமான காலநிலையின்போது விவசாயிகளுக்கு உதவுவது சீரான காய்கறி விநியோகத்தை உறுதிசெய்யும்,” என்றார் அவர்.

இதேபோல, பழ மரங்களுக்கு அடிக்கடி, குறிப்பாக இளமரங்களுக்குக் காலை, மாலை வேளைகளில் நீர் பாய்ச்சப்படுவதாகப் பழச்சாகுபடி சங்கத்தின் துணைத் தலைவர் நிக்கலஸ் சோங் கூறினார்.

சொந்தமாக நீர்த்தேக்க வசதி உள்ள விவசாயிகள் ஓரளவு சமாளிக்க முடிந்தாலும் வெப்ப அலை நீடித்தால் நீர் ஆதாரம் நிலைக்காது என்பதே முக்கியக் கவலையாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் வெப்பமான, வறண்ட வானிலை நிலவும்போது மழைப்பொழிவும் குறைகிறது.

இந்நிலையில், இவ்வாண்டு இறுதியில் வரக்கூடும் எனக் கணிக்கப்படும் ‘சூப்பர் எல் நினோ’ இந்தச் சூழலை மேலும் மோசமாக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகாய்கறிபழம்விவசாயிகள்வெப்ப அலை