விமானத்தில் தாம் கோரிய சைவ உணவு மறுக்கப்பட்டதால், பயணி ஒருவர் தொண்டை அடைத்துக்கொண்டதில் மூச்சுத்திணறி பின்னர் இறந்ததைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகமான ‘தி இன்டிபென்டண்ட்’ தெரிவித்தது.
2023 ஆகஸ்ட் 1ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து இலங்கைக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த திரு அசோகா ஜயவீர, 85, பயணம் செய்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
அவரின் மகன் சூர்யா ஜயவீர தொடுத்துள்ள வழக்கில், எப்போதும் சைவ உணவு மட்டுமே உண்ணும் தம் தந்தை சைவ உணவு கோரியதாகவும், ஆனால் சைவ உணவு எதுவும் இல்லை என்று விமானப் பணியாளர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, அவருக்கு ஒரு வழக்கமான உணவு வழங்கப்பட்டதாகவும் ‘அசைவத்தைச் சுற்றியுள்ளதை மட்டும் சாப்பிடுமாறு’ அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு அசோகா ஜயவீர அதை உண்ண முற்பட்டபோது, தொண்டை அடைத்துக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அந்தப் புகார் கூறுகிறது. ஆனால், அவர் எதைச் சாப்பிட்டதில் தொண்டை அடைத்துக்கொண்டது என்பது துல்லியமாகக் குறிப்பிடப்படவில்லை.
விமானத்தில் மருத்துவ அவசரநிலையின்போது தொலைதூரத்திலிருந்து வழிகாட்டும் விமானப் பயிற்சிபெற்ற அவசரகால மருத்துவர்களை வழங்கும் ‘மெட்ஏர்’ என்ற சேவையை உதவிக்காக விமானப் பணியாளர்கள் அழைத்தனர்.
அக்டோபர் 6 ஆம் தேதி தி இன்டிபென்டண்ட் வெளியிட்ட செய்திக் கட்டுரையில், விமானம் ‘ஆர்க்டிக் வட்டத்தின்/பெருங்கடலுக்குமேல் சென்றுகொண்டிருந்ததால்’ விமானியால் அதை அவசரமாகத் தரையிறக்க முடியவில்லை என்று புகாரில் கூறப்பட்டதாகத் தெரிவித்தது.
ஆனால், விமானம் அப்போது ஆர்க்டிக் வட்டத்துக்கு அல்லது பெருங்கடலுக்குமேல் செல்லவில்லை என்றும் அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்துக்கு மேலேதான் சென்றது என்றும் விமானத்தைத் திசைதிருப்பி இருக்கலாம் என்றும் திரு சூர்யா ஜயவீர தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் தரையிறங்கும் வரை மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மயக்கமடைந்த நிலையிலேயே திரு அசோகா ஜயவீர இருந்தார்.
பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், 2023 ஆகஸ்ட் 3ஆம் தேதி நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார் என்று அந்தப் புகார் கூறுகிறது. இது, உணவு அல்லது திரவம் விழுங்கப்படுவதற்குப் பதிலாக நுரையீரலுக்குள் சுவாசிக்கப்படுவதால் ஏற்படும் ஒரு தொற்றாகும்.
இந்த வழக்கு குறித்து கருத்துகூற விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கத்தார் ஏர்வேசோ திரு ஜயவீரவோ பதிலளிக்கவில்லை என்று தி இன்டிபென்டண்ட் சொன்னது.