குமாமோட்டோ: பத்தாண்டுகளுக்குமுன் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் பரவலான தொழில்துறைச் சீர்குலைவை ஏற்படுத்திய நிலையில், இவ்வாரம் தெற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டின் உற்பத்தி விநியோகத் தொடர் கட்டமைப்பினுடைய பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை (ஜூலை 29) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறைந்தது 34 உயிர்களைப் பலிகொண்டது; சாலைகளைச் சேதப்படுத்தியது; ஆயிரக்கணக்கான வீடுகளுக்குப் பொதுப் பயனீட்டுச் சேவைகளைத் துண்டித்தது.
மேலும், ஜப்பானின் வாகனத் தொழிலுக்கு முக்கியமான, பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் நாட்டின் ‘சிலிக்கான் வேலி’ என்று அழைக்கப்படும் ஒரு பகுதியிலுள்ள தொழிற்சாலைகளும் நிலநடுக்கத்தால் முடங்கியுள்ளன.
2016ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்குப் பிறகு காணப்பட்ட அளவிலான இடையூறுகளைப் பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் வாகன உற்பத்தி போன்ற நிறுவனங்களுக்குப் பிரச்சினைகள் நீடிக்கக்கூடும். அங்கு உதிரி பாகங்களின் பற்றாக்குறை பரவலான உற்பத்தியை முடக்கக்கூடும்.
எடுத்துக்காட்டாக, டொயோட்டா நிறுவனம், குமாமோட்டோவிற்கு வடக்கே உள்ள ஃபுகுவோகாவில் உள்ள தனது மூன்று ஆலைகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பேரிடர் தளத்திலிருந்து 600 கி.மீ.க்கும் அதிகத் தொலைவில் உள்ள ஐச்சியில் உள்ள அதன் ஆலைகளில் ஒன்றுகூட அடுத்த வாரம் முடங்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு, விநியோக நிறுவனங்கள், விநியோகிப்பாளர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டே இந்த இடைநிறுத்தங்களுக்கான முடிவு எடுக்கப்பட்டதாக டொயோட்டா பேச்சாளார் ஒருவர் தெரிவித்தார்.
நிலநடுக்க மையத்திற்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் டொயோட்டா, டாய்ஹட்சு, நிசான் நிறுவனங்களுக்குக் கதவுகள், இயந்திரங்கள், பிற பாகங்களைத் தயாரிக்கும் ஐசின் நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, தரம் உறுதிசெய்யப்பட்ட உற்பத்திப் பிரிவுகளில், படிப்படியாக உற்பத்தியை மீண்டும் தொடங்கத் தயாராகி வருவதாக அந்நிறுவனம் ஜூலை 30ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்தது. முழுமையான செயல்பாடுகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பதை அது இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்நிலையில், ஐசின் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள ஒரு கடையின் மேலாளர், நிலநடுக்கத்தால் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது என்றும் ஆனால் மின்விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

