புத்ராஜெயா: ‘விஇபி’ எனப்படும் வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கான அனுமதிக்கு சமர்ப்பிக்கப்படும் 17,000 விண்ணப்பங்கள் தொடர்பில் ஏற்பட்ட பின்னடைவு, வரும் வாரங்களில் சீர்செய்யப்படும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.
“அக்டோபர் 1ஆம் தேதி முதல் ‘விஇபி’ நடைமுறை கட்டாயமாகப்படும் என்று மே மாதம் நான் அறிவித்ததைத் தொடர்ந்து விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
“ஒரே மாதத்தில் மொத்தம் 23,649 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒப்புநோக்க, சென்ற ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 15,422,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 1ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் லோக் பேசினார்.
உலகின் ஆகப் பரபரப்பான நில எல்லைப் பாதைகளில் ஒன்றான ஜோகூர்-சிங்கப்பூர் கடற்பாலத்தை அன்றாடம் 145,000 வாகனங்கள் கடந்து செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப நடைமுறையை மேம்படுத்த, அதை இணையத்தின் வழியாக சமர்ப்பிக்க வகைசெய்யப்படும் என்றார் அமைச்சர் லோக்.
‘வி இபி’ தொடர்பான மின்னஞ்சல் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறிய அவர், உரிமம் காலாவதியாகுமுன் அதுகுறித்துத் தகவல் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டார்.