வாகனத் திருட்டுக் கும்பல்கள் முறியடிப்பு; 21 பேர் கைது

வாகனத் திருட்டுக் கும்பல்கள் முறியடிப்பு; 21 பேர் கைது

2 mins read
24 வாகனங்கள் மீட்பு
b9219b91-9927-42eb-a7f2-f631691f3c61
மீட்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களுடன் வங்சா மாஜு காவல்துறையினர். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: வங்சா மாஜுவில் செயல்பட்டுவந்த வாகனத் திருட்டுக் கும்பல்கள் நான்கை காவல்துறையினர் முறியடித்தனர்.

‘ஆப்பரேஷன் லெஜாங் காஸ் 1/26’ என்ற பெயரில் காவல்துறையினர் மேற்கொண்ட மூன்று மாத நடவடிக்கையால் இது சாத்தியமானது.

வாகனத் திருட்டுத் தொடர்பில் 21 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் 24 வாகனங்கள் மீட்கப்பட்டதாகவும் வங்சா மாஜு காவல்துறை மூத்த துணை ஆணையர் முகம்மது லஸிம் இஸ்மாயில் வியாழக்கிழமை (மார்ச் 26) தெரிவித்தார்.

“கைதுசெய்யப்பட்டோரில் 20 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்கள் 33 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள்,” என்று திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.

சந்தேகப் பேர்வழிகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது என்றும் அவர் சொன்னார்.

கைதுசெய்யப்பட்டோரில் பெரும்பாலோர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது அவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனைமூலம் தெரியவந்தது என்றும் திரு இஸ்மாயில் கூறினார்.

பிரகாஷ், இகான், கோபிஸ், போட்டாக் குவாங் என்ற பெயரில் இயங்கிவந்த அந்நான்கு வாகனத் திருட்டுக் கும்பல்கள், வங்சா மாஜு, கோம்பாக், கிள்ளான் பள்ளத்தாக்கு, பாகாங் போன்ற பகுதிகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியதாக நம்பப்படுகிறது.

“ஒரு பகுதியில் மோட்டார்சைக்கிள்களைத் திருடும் அவர்கள், தாங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்க அவற்றை மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச்சென்றுவிடுவர்,” என்று திரு இஸ்மாயில் விளக்கினார்.

சில வாகனங்கள் போலி பதிவெண்களுடனோ அல்லது அவற்றைக் கழற்றி உதிரி பாகங்களாகவோ இணையம் வழியாக விற்கப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

மீட்கப்பட்ட 24 வாகனங்களில் நான்கு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. எஞ்சியவை மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

காவல்துறை 4,109 பேரிடமும், 10 வாகனப் பட்டறை வளாகங்களிலும் சோதனை நடத்தியது; 3,157 வாகனங்களும் சோதிக்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்டோரில் ஐவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலர் மற்ற மாவட்டக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்