ஜோகூர் பாரு: இந்தச் சீனப் புத்தாண்டுக் காலத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும், ஜோகூருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது 30 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஜோகூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தப் பண்டிகைக் காலத்தில், சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடி, சுல்தான் அபு பக்கர் சோதனைச்சாவடி ஆகியவற்றில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதிசெய்வதில் காவல்துறை கவனம் செலுத்தும் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் அப் ரஹ்மான் அர்ஷாத் கூறினார்.
“இந்தச் சீனப் புத்தாண்டுக் காலம் முழுவதும் தொடர்ச்சியான நீண்ட விடுமுறைகள் வருவதால், இரண்டு முக்கிய நுழைவாயில்களிலும் வழக்கத்திற்கு மாறான நெரிசல் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
“சிங்கப்பூரில் இருந்து வரும், இந்த பண்டிகைக் காலத்தில் ஜோகூருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கமான நாள்களைவிட 30 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
“போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் 47 இடங்களையும், விபத்துகள் அதிகம் நிகழும் 38 இடங்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை (பிப்ரவரி 14) சுத்ரா கடைத்தொகுதியில், சீனப் புத்தாண்டை முன்னிட்டு ‘ஆப்ஸ் சிலாமாட் 25’ நடவடிக்கையைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆணையர் அப் ரஹ்மான் கூறுகையில், பிப்ரவரி 15 முதல் 20 வரை நடைபெறவுள்ள இந்த நடவடிக்கையில் 214 அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் 1,801 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
“போக்குவரத்தைச் சீர்ப்படுத்துவது மட்டுமல்லாமல், கடந்தகால நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது இந்த முறை விபத்துகளைக் குறைந்தது 5 விழுக்காடு குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“மோட்டார்சைக்கிளோட்டிகள் தொடர்பான விபத்துகளைத் தடுப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம், ஏனெனில் முந்தைய நடவடிக்கைகளில் உயிரிழப்பு விபத்துகளுக்கு அவர்களே முக்கியக் காரணமாக இருந்தனர்,” என்றும் அவர் சொன்னார்.
கடந்த ‘ஆப்ஸ் சிலாமாட்’ நடவடிக்கையின்போது எட்டுப் பேர் உயிரிழந்த ஐந்து மரண விபத்துகள் உட்பட மொத்தம் 1,169 விபத்துகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

