வெனிசுவேலா நிலநடுக்கம்: 6 நாள்களுக்குப்பின் சிறுவன் மீட்பு

வெனிசுவேலா நிலநடுக்கம்: 6 நாள்களுக்குப்பின் சிறுவன் மீட்பு

2 mins read
c90b9405-8b84-4c2d-bd6a-6ed2e0710feb
கட்டட இடிபாடுகளில் ஆறு நாள்கள் சிக்கியிருந்த சிறுவனை ஜோர்தானிய மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். - படங்கள்: ராய்ட்டர்ஸ்

கராக்கஸ்: வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களுக்குப் பிறகு, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுவன் ஒருவன் ஆறு நாள்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

லா குவைரா மாநிலத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து ஜோர்தான் நாட்டு மீட்புக் குழுவினர் அச்சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டனர்.

அங்குக் கடந்த வாரம் ஒரு நிமிட இடைவெளியில் முறையே 7.2 ரிக்டர், 7.5 ரிக்டர் அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், இச்சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டது எஞ்சியவர்களைத் தேடும் பணிகளில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அச்சிறுவனுக்குக் கராக்கஸ் மருத்துவமனையில் தீவிரக் கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வேளையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ‘யுனிசெஃப்’ அமைப்பின் 47 டன் எடையிலான மனிதநேய உதவிப் பொருள்கள் வெனிசுவேலா சென்றடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

லா குவைரா பகுதியில் ஜூன் 30ஆம் தேதி தேடி மீட்கும் பணியில் ஒலிச் சோதனையில் ஈடுபட்ட மீட்புப் பணியினர்.
லா குவைரா பகுதியில் ஜூன் 30ஆம் தேதி தேடி மீட்கும் பணியில் ஒலிச் சோதனையில் ஈடுபட்ட மீட்புப் பணியினர். - படம்: ஏஎஃப்பி

தீவிர மீட்புப் பணிகள்

இவ்வேளையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் தொடர்ந்து நீடிப்பதால், மீட்புப் பணிகள் பெருஞ்சவால்களையும் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்கின்றன. இருப்பினும் மீட்புக் குழுவினர் மிகுந்த கவனத்துடன் முழு மூச்சாகப் போராடி வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் பொதுமக்களும் கைப்பேசி ஒலிகூட இல்லாமல் மிக அமைதியாகக் கவனித்து, திடீரென இடிபாடுகளுக்குள்ளிருந்து ஏதேனும் சத்தம் கேட்டால், அங்கு விரைந்து சென்று இடிபாடுகளைத் தோண்டத் தொடங்குகின்றனர்; சத்தம் எதுவும் கேட்கவில்லை எனில், ஏமாற்றத்துடன் அடுத்த இடத்திற்கு நகர்கின்றனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அமெரிக்க ராணுவத்தினரின் பங்களிப்பு

துயர்துடைப்பு, மீட்பு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக அமெரிக்க ராணுவம் 900க்கும் அதிகமான பணியாளர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. கரீபிய வட்டாரங்களில் மேலும் 800 பேர் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கத் தென்னகத் தளபத்தியத்தின் தளபதி ஜெனரல் பிரான்சிஸ் டோனாவன், அமெரிக்கப் படைகள் தேடல், மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதுடன், விமான நிலையச் செயல்பாடுகளைச் சீரமைக்கவும் மனிதநேய உதவிகள் வந்தடைவதற்கு ஏதுவாக வான்வழி, கடற்படைத் தளவாடங்களை ஒருங்கிணைக்கவும் உதவியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், சேதமடைந்த கட்டடங்களைக் கண்டறியவும், விநியோகப் பாதைகள் திறந்திருப்பதை உறுதிசெய்யவும் வெனிசுவேலா அதிகாரிகளுக்கு உதவும் வகையில், மியாமியில் உள்ள தகவல் ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஆதரவோடு நான்கு அல்லது ஐந்து ‘எம்யுகியூ-9 ரீப்பர்’ வகை ஆளில்லா விமானங்கள் வெனிசுவேலா வான்வெளியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்