வெனிசுவேலா நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 1,500ஐ நெருங்கியது

வெனிசுவேலா நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 1,500ஐ நெருங்கியது

1 mins read
a432b103-adcb-478a-9503-3b12c9586f5b
வெனிசுவேலாவின் லா குவேரா மாநிலத்தின் கரபாயேடா நகரில் கட்டட இடிபாடுகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கராக்கஸ்: வெனிசுவேலாவைக் கடந்த வாரம் உலுக்கிய இரண்டு வலுவான நிலநடுக்கங்களிலிருந்து மேலும் அதிகமானோரை உயிருடன் கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள் போராடிவருகின்றன.

நிலநடுக்கங்களில் மாண்டோர் எண்ணிக்கை 1,500ஐ நெருங்கியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.

லா குவேரா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் அங்குக் குழுமியிருக்கின்றன. ஏற்கெனவே அரசியல், பொருளியல் நெருக்கடிகளின் காரணமாகக் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது வெனிசுவேலா.

தலைநகர் கராக்கசிலிருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோர நகரமான லா குவேராவில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாயின.

கட்டடங்களின் நிலைத்தன்மையைச் சோதிக்கும் வகையில் அவை மனிதர்கள் வாழ்வதற்கு உகந்தவைதானா என்பதை நிர்ணயிக்க அதிபர்-ஆணையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆணையம்பற்றி இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

“மீட்புப் பணிகள் நிறுத்தப்படவில்லை. அவை தொடர்ந்து நடைபெறுகின்றன. உயிருடன் சிலரை மீட்டுள்ளோம். நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்,” என்று அவர் சொன்னார்.

பள்ளிகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்று அவர் தெரிவித்தார். லா குவேரா நகரில் மின்விநியோகம் ஏறக்குறைய 75 விழுக்காடு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் திருவாட்டி ரோட்ரிகஸ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்