வெனிசுவேலா விவகாரம்: எண்ணெய் விலையில் சரிவு

2 mins read
35b64e6b-a25a-4743-b7c5-8d37459c3192
ஜனவரி 4ஆம் தேதி அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட அதிபர் மதுரோவுக்கு ஆதரவாக தலைநகர் கரக்காசில் பேரணி நடைபெற்றது. ஆதரவாளர்களில் ஒருவர் அதிபர் மதுரோவின் படத்தை ஏந்தியுள்ளார். - படம்: இபிஏ

தோக்கியோ: வெனிசுவேலா நாட்டின்மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்து அந்நாட்டின் அதிபரான நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த எதிரொலியால் ஜனவரி 5ஆம் தேதி எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டது.

வெனிசுவேலா, ஆகப்பெரிய அளவில் எண்ணெய் வளமிக்க நாடாகும்.

வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதால் சந்தைகளில் தேவையை விட விநியோகம் கூடும். இது, எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆசியாவின் காலைநேர வர்த்தகத்தில் பிரன்ட் கச்சா எண்ணெய் 0.21 விழுக்காடு குறைந்து ஒரு பீப்பாய் 60.62 யுஎஸ் டாலருக்கு விற்பனையானது. வெஸ்ட் டெக்சாஸ், 0.35 விழுக்காடு குறைந்து பீப்பாய் 57.12 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

சென்ற ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்காவின் படைகள் வெனிசுவேலாவின் தலைநகரைத் தாக்கி அதிபர் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்சையும் அழைத்துச் சென்று நியூயார்க்கில் தடுப்புக் காவலில் வைத்தது.

அவர்கள் மீது போதைப் பொருளைக் கடத்துவதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் டோனல்ட் டிரம்ப், வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என்று கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் பாழடைந்துள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை அமெரிக்க நிறுவனங்கள் சீர்செய்யும் என்றார்.

போதுமான முதலீடுகள் இல்லாதது, பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டதால் வெனிசுவேலா தற்போது நாளுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. இது, 1999ஆம் ஆண்டின் 3.5 மில்லியன் பீப்பாயைவிடக் குறைவாகும்.

ஆனால், வெனிசுவேலாவின் எதிர்காலம் குறித்து கவனிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.,

“எண்ணெய் உற்பத்தியைப் பெருக்க போதுமான முதலீடுகள் தேவைப்படுகின்றன. அது எந்தவகையில் நிவர்த்தி செய்யப்படும் என்பது தெரியவில்லை,” என்று யுபிஎஸ் நிபுணர் கியோவான்னி ஸ்டாவுநோவோ ஏஎஃப்பியிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்