அரசதந்திர உறவுகளை மீட்டெடுப்பதற்காக அமெரிக்காவுடன் வெனிசுவேலா பேச்சுவார்த்தை

2 mins read
75ea394b-8796-4448-8d03-3bbace33a810
வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகசின் (நடுவில்) அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்துடன் அரசதந்திர செயல்முறையைத் தொடங்க முடிவு செய்துள்ளது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

கராகஸ்: அமெரிக்கப் படைகள் அதன் அதிபராக நிக்கலஸ் மதுரோவைப் பதவி நீக்கம் செய்த சில நாள்களுக்குப் பிறகு, அரசதந்திர உறவுகளை மீட்டெடுப்பது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக வெனிசுவேலா தெரிவித்துள்ளது.

அந்த இடதுசாரித் தலைவர் கைது செய்யப்பட்டதையும், தென் அமெரிக்க நாட்டின் ‘பொறுப்பாளர்’ என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதையும் தொடர்ந்து இது ஒத்துழைப்பின் அண்மைய அறிகுறியாகும்.

நாட்டின் தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க அமெரிக்க அரசதந்திரிகள் கராகசில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் வாஷிங்டனில், திரு டிரம்ப் வெனிசுவேலாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகளை அணுகுவதற்கான தனது திட்டங்கள் குறித்து எண்ணெய் நிறுவனங்களைச் சந்தித்தார்.

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகசின் அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்துடன் அரசதந்திர செயல்முறையைத் தொடங்க முடிவு செய்துள்ளது,” என்று வெளியுறவு அமைச்சர் யுவான் கில், வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) அன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அண்டை நாடான கொலம்பியாவில் உள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அரசதந்திரி திரு ஜான் மெக்னமாரா மற்றும் பிற பணியாளர்கள் ‘கட்டங்கட்டமாக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆரம்ப மதிப்பீட்டை நடத்துவதற்காக கராகசுக்குப் பயணம் செய்தனர்’ என்று பெயர் வெளியிட விரும்பாத ஓர் அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

வாஷிங்டனுக்கு ஒரு குழுவை அனுப்புவதன் மூலம் தான் பதில் நடவடிக்கை எடுக்கும் என்று வெனிசுவேலா கூறியது.

அமெரிக்காவின் ‘கடுமையான, குற்றவியல், சட்டவிரோத தாக்குதலைக்’ கண்டித்து, “வெனிசுவேலா இந்த ஆக்கிரமிப்பை அரசதந்திர வழியில் தொடர்ந்து எதிர்கொள்ளும்,” என்று திருமதி ரோட்ரிகஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்