அமெரிக்க நிறுவனங்களுடன் எண்ணெய், எரிவாயு ஒப்பந்தங்களில் வெனிசுவேலா கையெழுத்து

அமெரிக்க நிறுவனங்களுடன் எண்ணெய், எரிவாயு ஒப்பந்தங்களில் வெனிசுவேலா கையெழுத்து

2 mins read
0178cfe5-77a3-4cf0-a32d-e5d26d322247
வெனிசுவேலாவில் எண்ணெய் நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, சீர்குலைந்து வருவதாகக் கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

கராக்கஸ்: வெனிசுவேலா, அமெரிக்க நிறுவனங்களுடன் எண்ணெய், எரிவாயு ஒப்பந்தங்களில் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) கையெழுத்திட்டுள்ளது. எண்ணெய், எரிவாயு உற்பத்தியைப் பெருக்குவது அவற்றின் நோக்கம்.

வெனிசுவேலாவின் இடசாரித் தலைவர் நிக்கலஸ் மடூரோவைப் பதவியிலிருந்து வா‌ஷிங்டன் அகற்றிய பிறகு, இரு தரப்புக்கும் இடையில் உறவு சீரடைந்துவருவதன் அறிகுறியாக அது பார்க்கப்படுகிறது.

தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவைத் தற்போது இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் வழிநடத்துகிறார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை அணுக முனைப்போடு இருக்கிறார். அமெரிக்க நெருக்குதலுக்கு இடையில் திருவாட்டி ரோட்ரிகஸ் வா‌ஷிங்டனின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைத்து வருகிறார்.

திரு மடூரோ அரசாங்கத்தில் துணையதிபராக இருந்தவர் திருவாட்டி ரோட்ரிகஸ். இவ்வாண்டு (2026) ஜனவரி மாதம், திரு மடூரோவை அமெரிக்கப் படையினர் வளைத்துப் பிடித்தனர். தற்போது அவர் அமெரிக்காவில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்நோக்குகிறார். உலகில் ஆக அதிக எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடு வெனிசுவேலா. இருப்பினும் அதன் பொருளியல் தற்போது கடும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

புதிய ஒப்பந்தத்தின்படி, வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் அதிகமுள்ள ஒரினோக்கோ வட்டாரத்தில், அமெரிக்காவின் ஹன்ட் ஓவர்சீஸ் எண்ணெய் நிறுவனமும் கிராஸ்ஓவர் எரிசக்தி நிறுவனமும் செயல்படும்.

இருதரப்பு நலன்களும் கைகூடும் அம்சங்களில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டதாகத் திருவாட்டி ரோட்ரிகஸ் தெரிவித்தார்.

“அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையில் நீண்டகால உறவை ஏற்படுத்துவதற்குரிய வலுவான அடித்தளத்தை அமைக்க உறுதிபூண்டுள்ளோம் என்று செயல் வீரரான அதிபர் டிரம்ப்பிடம் தயவுசெய்து சொல்லுங்கள்,” என்றார் அவர்.

‌ஷெவ்ரோன், எனீ, ரெப்சோல் உள்ளிட்ட பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் வெனிசுவேலா எரிசக்தி ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்