மதுரோவை விடுவிக்கும்படி போராடும் வெனிசுவேலா மக்கள்

2 mins read
84ebac85-b838-4824-b610-f8020b15ba18
வெனிசுவேலா உயர் நீதிமன்றம் இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகிக்கும்படி துணையதிபர் டெல்சி ரோட்ரிகஸுக்கு உத்தரவிட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

மெக்சிகோ சிட்டி: அமெரிக்காவுடன் சமநிலையான, மரியாதைக்குரிய உறவுக்கு வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே சமநிலையான உறவை நோக்கி முன்னேறுவது வெனிசவேலாவின் முன்னுரிமை என்று அவர் டெலிகிராமில் பதிவிட்டார்.

“இணைந்து செயல்படும்படி அமெரிக்க அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்துள்ளோம்,” என்றார் திருவாட்டி ரோட்ரிகஸ். ஆனால், அவர் ஒன்றுக்குப் பின் முரணாகப் பேசுவதாகப் பலரும் கருதுகின்றனர்.

சனிக்கிழமை (ஜனவரி 3) தொலைக்காட்சியில் பேட்டியளித்த அவர், அதிபர் மதுரோதான் வெனிசுவேலாவின் ஒரே அதிபர் என்றும் திரு டிரம்ப்புடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வெனிசுவேலா உயர் நீதிமன்றம் இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகிக்கும்படி திருவாட்டி ரோட்ரிகஸுக்கு உத்தரவிட்டதை அடுத்து அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும்படி அவர் தற்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை மீட்க சிறப்பு ஆணையம் ஒன்றை அவர் அமைத்துள்ளார்.

இது அனைத்துலக அளவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, மதுரோவின் விடுதலைக்கு ஆதரவாக மக்களிடம் பிரசாரத்தை முன்னெடுக்கும். மதுரோவின் சட்டபூர்வ விடுதலையை வலியுறுத்தச் செயல்படும்.

இந்நிலையில் மதுரோ, அவரது மனைவி இருவரையும் மீட்கக் கோரி வெனிசுவேலா தலைநகர் கரகாஸில் ஏறக்குறைய 2,000 ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வெனிசுவேலாமீது திடீர்த் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, திரு மதுரோவையும் அவரது துணைவியாரையும் சிறைப்பிடித்து நியூயார்க் சிறையில் அடைத்துள்ளது.

திரு மதுரோவின் ஆதரவாளர்களுடன் துணை ராணுவ வீரர்களும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் குதித்த திரு மதுரோவின் ஆதரவாளர்களுடன் துணை ராணுவ வீரர்களும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களும் இணைந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் குதித்த திரு மதுரோவின் ஆதரவாளர்களுடன் துணை ராணுவ வீரர்களும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களும் இணைந்துகொண்டனர். - படம்: ஏஎஃப்பி

திரு மதுரோவின் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் கருதப்படும் காலஞ்சென்ற பொதுவுடைமைவாதி ஹியூகோ ‌‌‌சாவேசின் படமிருந்த சட்டையை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர், ‘எங்கள் அதிபரை விடுதலை செய்’ என்ற வாசகங்களில் இருந்த பதாகைகளைக் கைகளில் பிடித்திருந்தனர்.

வெனிசுவேலாவில் நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெனிசுவேலாவில் நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: ஏஎஃப்பி

வெனிசுவேலாவை அமெரிக்கா இனி நிர்வகிக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதற்கு எதிராக ‘வெனிசுவேலா எவருடைய நாடும் கிடையாது’ என்று மற்றொரு பதாகையில் எழுதியிருந்தது.

அமெரிக்காவுக்குள் கொக்கெயின் கடத்தியதாகக் கூறப்படும் திரு மதுரோமீது நியூயார்க் நீதிமன்றத்தில் போதைப் பொருள் பயங்கரவாதக் குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் போதைப் பொருளைக் கடத்துபவரும் பயங்கரவாதியும் திரு டிரம்ப்தான் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சாடினர். அமெரிக்கப் படைகளின் தாக்குதலால் அப்பாவி உயிர்கள் பறிபோனதாகவும் அவர்கள் குறைகூறினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் திரு மதுரோ உள்வட்டத்தில் உள்ளோரால் வஞ்சிக்கப்பட்டதாகவும் கூறினர்.

வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோவையும் அவரது துணைவியாரையும் விடுவிக்க கோரி மக்கள் ஆர்பாட்டம் செய்தனர்.
வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோவையும் அவரது துணைவியாரையும் விடுவிக்க கோரி மக்கள் ஆர்பாட்டம் செய்தனர். - படம்: இபிஏ

வெனிசுவேலா மருத்துவமனைகள், தாக்குதல்களில் மாண்டவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட மறுத்துவிட்டன.

ராணுவ வீரர்கள், குடிமக்கள் உள்பட திரு மதுரோவின் பாதுகாப்புப் படையில் உள்ள பெரும்பகுதியினர் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று வெனிசுவேலா தற்காப்பு அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ லோபேஸ் கூறினார்.

ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசிய மருத்துவர்கள் குழு, தாக்குதலில் ஏறக்குறைய 70 பேர் மாண்டனர் என்றும் 90 பேர் காயமடைந்தனர் என்றும் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்