வெனிசுவேலாவின் 65 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் அமெரிக்கா வசம்: அதிபர் டிரம்ப்

வெனிசுவேலாவின் 65 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் அமெரிக்கா வசம்: அதிபர் டிரம்ப்

2 mins read
c326b996-e357-4556-9503-8639eacb50b5
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடது), வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகுவேஸ். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: வெனிசுவேலாவின் 65 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 28) அறிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகுவேஸ் ஆகியோரின் தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் சாத்தியமானது என்று கூறிய டிரம்ப், தனது சமூக ஊடகப் பதிவில் இதனை வெளியிட்டார்.

“உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை அமெரிக்கா வெனிசுவேலாவுடன் மேற்கொண்டுள்ளது,” என அதிபர் டிரம்ப் தமது பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் நிக்கலஸ் மதுரோவைக் கைது செய்ய, அதிபர் டிரம்பின் உத்தரவின்பேரில் அமெரிக்க ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வதற்காக மதுரோ அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்.

உள்ளூரில் பெட்ரோல் விலை உயர்வால் அமெரிக்க அரசுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் உடனான போர் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், எரிபொருள் விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்கா ஏற்கெனவே தனது உத்திபூர்வ எண்ணெய் கையிருப்பைப் பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் தொடக்கத்தில் அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு 300 மில்லியன் பீப்பாய்க்கும் கீழே சரிந்தது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் இது 100 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான சரிவாகும். முன்னதாக ஜனவரி மாதத்தில் மதுரோ பதவியிலிருந்து அகற்றப்பட்ட உடனேயே, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை மீண்டும் வெனிசுவேலாவுக்குள் கொண்டு வருவது குறித்து அதிபர் டிரம்ப் விவாதித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்
வெனிசுவேலாஅமெரிக்காடோனல்ட் டிரம்ப்பெட்ரோல்