வாஷிங்டன்: அளவிலும் அமைப்பிலும் பூமிக்கு மிகவும் ஒத்திருக்கும் வெள்ளிக் கோள் தனக்கே உரித்தான நிலவை விழுங்கியிருக்கக்கூடும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெள்ளிக் கோள் மிகவும் மெதுவாகச் சுற்றக்கூடியதாகும். இதனால், ஒரு காலத்தில் அதனைச் சுற்றி வந்திருக்கக்கூடிய இயற்கைத் துணைக்கோள்கள் அல்லது நிலவுகள், படிப்படியாக அதன் தாய்க் கோளான வெள்ளியை நோக்கியே சுழன்று சென்று, இறுதியில் அதனுடன் மோதி முழுமையாக உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டு, வானியற்பியல் இதழில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கோட்பாடு, சூரியனிடமிருந்து இரண்டாவது கோளாக உள்ள வெள்ளிக்கு நிலவு இல்லாததற்குக் கூறப்பட்ட கடந்த கால விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.
“வெள்ளிக் கோளுக்கு ஒரு நிலவு பெரும்பாலும் ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடும். அதைத் தன்னால் தக்கவைத்துக்கொண்டிருக்க முடியாது. ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அந்த நிலவு வெள்ளிக் கோள்மீது மோதி அழிந்திருக்கும்,” என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரும் வானியற்பியலாளருமான ஸ்டீஃபன் கிரேன் கூறினார்.
4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியக் குடும்பத்தின் வரலாற்றில், வெள்ளிக் கோள் தனது நிலவை விழுங்கிய இந்தச் சம்பவம், அதன் முதல் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள்ளேயே நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் சொன்னார்
முன்னதாக, பூமியின் 'இரட்டை' என்றழைக்கப்படும் வெள்ளிக் கோளுக்குத் தொடக்கத்திலிருந்தே நிலவு உருவாகியிருக்காது அல்லது வேறொரு விண்பொருளின் வலுவான மோதலால் அதன் நிலவு முற்றிலும் அழிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் பரவலாகக் கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
