ஜூலை 1 முதல் மலேசியாவுக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு ‘விஇபி’ கட்டாயம்

2 mins read
65060c8d-52b7-42e5-a7a3-3ba4c7622f05
விஇபி இல்லாமல் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கு 300 ரிங்கிட் ($91) அபராதம் விதிக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

புத்ராஜெயா: ஜூலை 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் வாகனங்கள், மலேசியாவுக்குள் வாகன நுழைவு அனுமதி (விஇபி) இன்றி நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஇபி இன்றி மலேசியாவுக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் புதன்கிழமை (ஜூன் 4) தெரிவித்தார்.

விஇபி கட்டமைப்பில் பதிவு செய்ய வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டதாக திரு லோக் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டதாக அவர் கூறினார்.

விஇபி இல்லாமல் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கு 300 ரிங்கிட் ($91) அபராதம் விதிக்கப்படும்.

சாலைப் போக்குவரத்துத்துறை முனையங்கள், ஜேபிஜே முனையங்கள், MyEG இணையத்தளம் ஆகியவற்றில் ரொக்கமில்லா கட்டணம் செலுத்தும் முறை மட்டுமே ஏற்கப்படும்.

அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள் அபராதத் தொகையைச் செலுத்திய பிறகே மலேசியாவிலிருந்து வெளியேற முடியும் என்று புத்ராஜெயாவில் உள்ள மலேசியப் போக்குவரத்து அமைச்சுக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் லோக் தெரிவித்தார்.

அத்துடன், மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் விஇபிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த 231,018 தனியார் வாகனங்கள் விஇபி கட்டமைப்புடன் பதிவு செய்துவிட்டதாக திரு லோக் கூறினார்.

அவர்களில் 15 விழுக்காட்டினர் அதற்கான வானொலி அலைவரிசை அடையாள ஒட்டுவில்லைகளை இன்னும் இயக்கவில்லை என்றார் அவர்.

மேலும் 2,660 தனியார் நிறுவன வாகனங்களுக்கு இந்த ஒட்டுவில்லைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் லோக் தெரிவித்தார்.

விஇபி அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளபோதும் இன்றும் உரிய அனுமதிகள் கிடைக்காத தனியார் நிறுவன வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. மாறாக, அவற்றுக்கு நினைவுறுத்தல் கடிதம் வழங்கப்பட்டு, மலேசியாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்