சிங்கப்பூர் வாகனங்களில் விஇபி சோதனை

சிங்கப்பூர் வாகனங்களில் விஇபி சோதனை

2 mins read
52ce5e45-d926-4854-814d-d453b509eca5
ஜோகூரில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 82,987 வாகனங்களில் சோதனை நடைபெற்றன. - கோப்புப் படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவின் சாலை போக்குவரத்து துறை, வெளிநாட்டு வாகனங்களை சோதனையிட்டு 5,984 அபராதம் செலுத்துவதற்கான கடிதங்களை அனுப்பியது. அபராதத்தின் மொத்த மதிப்பு 2.19 மில்லியன் ரிங்கிட்டாகும்.

கடந்த ஆண்டு ஜூலையில் விஇபி எனும் வெளிநாட்டு வாகனங்களுக்கான வாகன நுழைவு அனுமதியை மலேசியா அறிமுகப்படுத்தியது.

சிங்கப்பூர், மலேசிய எல்லையைக் கடந்து மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்கள் இந்த விஇபிக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.

இந்நிலையில் விஇபி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 82,987 வாகனங்களில் சோதனை நடைபெற்றதாக சாலை போக்குவரத்து துறையின் இயக்குநர் ஜெனரல் ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.

சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் (பிஎஸ்ஐ), சுல்தான் அபுபக்கர் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் கட்டடம் ஆகியவற்றுக்கு அருகிலும் தாமான் தயாவிலும் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

விஇபிக்குப் பதிவு செய்யத் தவறிய, காலாவதியான அனுமதிகளை வைத்திருந்த, அல்லது பதிவு நிலுவையில் இருந்த தனியார் மற்றும் நிறுவனங்களின் வாகன உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்களுக்கு அபராதக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை இரவு பிஎஸ்ஐ சிஐகியூவிலிருந்து வெளியேறும் பாதையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஏடி ஃபட்லி பேசினார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுடன் இணைந்து விஇபி அமலாக்கச் சோதனை நடைபெற்றது.

அமைச்சின் தலைமைச் செயலாளரான அஸ்மான் அடாமும் ஜோகூர் சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குநர் சுல்கர்னைன் யாசினும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

விஇபி பதிவுகளின் விவரங்களையும் திரு ஏடி ஃபட்லி வெளியிட்டார்.

கடந்த வியாழக்கிழமை வரை 391,007 விஇபி ஆர்எஃப்ஐடி வில்லைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் தனியார் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 322, 048 வில்லைகள் செல்லுபடியாகக் கூடியவை. எஞ்சிய 14,771 வில்லைகள் செயலற்றுக் கிடக்கின்றன. நிறுவனங்களுக்கான வில்லைகளில் 47,496 பயன்படுத்தக் கூடியதாகவும் 7,792 செயலற்று இருப்பதாகவும் ஏடி ஃபட்லி கூறினார்..

இத்தகைய சோதனை நடவடிக்கைகளால் உள்நாட்டு விதிமுறைகளை வெளிநாட்டு வாகனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய முடிகிறது. குறிப்பாக தேசிய மானிய எரிபொருளான ரோன் 95 பெட்ரோலை வெளிநாட்டு வாகனங்கள் நிரப்புவதையும் கட்டுப்படுத்த முடிகிறது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர்சோதனை