‘விஇபி’ பெறாத சிங்கப்பூர் ஓட்டுநர்கள் கவலைப்பட வேண்டாம்: மலேசிய அமைச்சர்

2 mins read
8b449a38-e892-42db-bec6-c5c5ac0fdb87
மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக். - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: வாகன நுழைவு உரிம (VEP) வில்லைகளை தங்களது வாகனத்தில் பொருத்தாத சிங்கப்பூர் ஓட்டுநர்கள் அபராதத்தை எண்ணி இப்போதைக்குக் கவலைப்பட வேண்டியதில்லை என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்து உள்ளார்.

வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்கான வாகன நுழைவு உரிம முறை இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில், அதில் இடம்பெறாத வாகனங்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்படும் என்று ‘சேனல் நியூஸ் ஏஷியா’ (CNA) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தாத சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று திரு லோக்கிடம் ‘சிஎன்ஏ’ கேட்டது.

அத்தகைய ஓட்டுநர்கள் மீது 2025 ஜனவரி 1 முதல் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஆகஸ்ட் மாதம் அறிவித்து இருந்தது.

மேலும், அபராத பாக்கி வைத்திருக்கும் ஓட்டுநர்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று அப்போது அது கூறியிருந்தது. அந்த நடவடிக்கை தீவிரமடையும்போது அபராதம் செலுத்தாத ஓட்டுநர்களின் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், ஜனவரி 1 முதல் அத்தகைய சிங்கப்பூர் ஓட்டுநர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்பதை திரு லோக் உறுதி செய்யவில்லை.

“எந்தவோர் அமலாக்க நடவடிக்கையாக இருப்பினும் முறைப்படி தகவல் அளித்து அறிவிக்கப்படும். எனவே ஓட்டுநர்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அவர்.

தற்போதைய நிலவரப்படி, வாகன நுழைவு உரிமத்துக்கு விண்ணப்பம் செய்யாத ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கும் முறையே நீடிக்கும் என்று கூறிய அவர், ஆயினும், இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என்றார்.

எனவே, வாகன நுழைவு அனுமதிக்கான பதிவை முடிக்குமாறு ஓட்டுநர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரையிலான காலகட்டத்தில் 35,000க்கும் மேற்பட்ட ‘சம்மன்’களின் அபராதத் தொகைகளை சிங்கப்பூர் ஓட்டுநர்கள் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று மலேசிய காவல்துறை தெரிவித்து இருந்தது.

அவ்வாறு பாக்கி வைக்கப்பட்டு இருக்கும் அபராதத் தொகை 3.5 மில்லியன் ரிங்கிட் (US$783,000) என்றும் காவல்துறை கூறி இருந்தது.

குறிப்புச் சொற்கள்