ஈரானில் மிக வலுவான அணுசக்திச் சரிபார்ப்புச் சோதனைகள் தேவை: ஐஏஇஏ தலைவர்

ஈரானில் மிக வலுவான அணுசக்திச் சரிபார்ப்புச் சோதனைகள் தேவை: ஐஏஇஏ தலைவர்

1 mins read
c2531ff0-c486-4e05-b27c-1f6e3a832134
ஜப்பானில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குநர் ரஃபேல் குரோசி. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: மத்திய கிழக்குப் பூசலைத் தொடர்ந்து, ஈரான் அணுவாயுதங்கள் உருவாக்காததை உறுதிசெய்ய, அங்கு மிக வலுவான அணுசக்திச் சரிபார்ப்புச் சோதனைகள் தேவை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ஈரானும் விரிவான ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், அந்த அமைப்பின் தலைவர் ரஃபேல் குரோசி அந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“ஈரானில் அணுவாயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்வதே அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று நான் நினைக்கிறேன். இது தங்களின் நோக்கமல்ல என்று ஈரான் அரசாங்கம் மிகத் தெளிவாக அறிவித்துள்ளது,” என்று ஜப்பானில் செய்தியாளர்களிடம் குரோசி கூறினார்.

“ஆனால், வெறும் நோக்கங்கள் மட்டுமே போதுமானவை அல்ல. நாம் நடைமுறைக்குச் சாத்தியமான மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு வலுவான சரிபார்ப்பு முறையை அங்குக் கொண்டுவரவேண்டும்,” என்றார் அவர்.

அமெரிக்காவுடன் எட்டப்பட்ட முதற்கட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, டெஹ்ரானின் யுரேனியம் இருப்பு குறித்து என்ன செய்வது என்பது பற்றி ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை அனைத்துலக அணுசக்தி அமைப்பு இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை என்றும் குரோசி கூறினார்.

“தொடக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அணுசக்திஅமெரிக்கா