ஹோர்முஸ் நீரிணை வழியாக சிங்கப்பூர் நீர்ப்பகுதிக்கு வந்த கப்பல்

ஹோர்முஸ் நீரிணை வழியாக சிங்கப்பூர் நீர்ப்பகுதிக்கு வந்த கப்பல்

2 mins read
fb66f35c-2c22-4759-b228-d9f9d56eceaa
ஓ‌ஷன் தண்டர் கப்பல். - படம்: வெசல் ஃபைண்டர்

மலேசியாவின் கச்சா எண்ணெய்க் கப்பலான ‘ஓ‌ஷன் தண்டர்’, ஜோகூர் மாநிலத்தின் பெங்கெராங் பகுதியை நோக்கிச் சென்றது; அது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) சிங்கப்பூர் கடற்பகுதிவழிச் சென்றது.

பனாமா நாட்டுக் கொடியைக் கொண்டுப் பயணம் செய்யும் அந்தக் கப்பல் சிங்கப்பூர் நிரிணை வழியாகச் சென்றதாக ஏஐஎஸ் எனப்படும் கடல்துறை தானியக்கக் கண்காணிப்பு முறையில் தெரிந்தது. 274 மீட்டர் நீளம்கொண்ட அக்கப்பலில் ஒரு மில்லியன் பீப்பாய் அளவு கச்சா எண்ணெய் உள்ளது. ஈராக்கிய கச்சா எண்ணெய் அந்தக் கப்பலில் உள்ளது.

பெட்ரோனாஸ் நிறுவனம் நடத்தும் பெங்கெராங் ஒருங்கிணைந்த பெட்ரோல் நிலையத்தை நோக்கி கப்பல் சென்றுகொண்டிருக்கிறது. கப்பல் விரைவில் நிறுத்தப்பட்டு அதிலிருந்து எண்ணெய் இறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது.

கப்பல் மேற்கொண்ட மிகவும் அபாயகரமான பயணம் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இம்மாதம் ஐந்தாம் தேதி ‘ஓ‌ஷன் தண்டர்’ ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தது. ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் மலேசியாவுடன் தொடர்புடைய சில கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைக் கடந்திருக்கின்றன. உலகளவில் எரிசக்தி விநியோகிக்கப்படும் பாதைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது அதற்குக் காரணம்.

அரசதந்திர ரீதியான முயற்சிகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதி வழங்கப்பட்டது. அவற்றில் ஓ‌ஷன் தண்டரும் ஒன்று என நம்பப்படுகிறது.

ஈராக்கிய எண்ணெய்யை ஏந்திச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்குப் பூசல் தொடங்கியதிலிருந்து, ‘ஓ‌ஷன் தண்டர்’ சேர்த்து மலேசியாவை நோக்கிச் சென்ற மேலும் ஒரு கப்பல் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாகக் கடல்துறைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஓ‌ஷன் தண்டரில் உள்ள பாஸ்ரா ஹெவி கச்சா எண்ணெய், உயர்தரப் பொருள்களை உருவாக்கும் நோக்குடன் பெங்கெராங் போன்றவற்றில் இருக்கும் நிலையங்களில் சுத்திகரிக்கப்படுவதுண்டு.

குறிப்புச் சொற்கள்