சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 90 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்ட பிறகு கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்படும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 24ஆம் தேதியளவில் இந்த தடுப்பூசி இலக்கை விக்டோரியா அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கிருமிப் பரவல் அதிகம் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் மட்டும்தான் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அத்தியாவசியச் சேவைகளை வழங்காத சில்லறை வர்த்தகக் கடைகளுக்குச் செல்ல முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு மட்டுமே தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.
நேற்று முன்தின நிலவரப்படி விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 1,935 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. கிருமித்தொற்று ஏற்பட்டிருந்த 11 பேர் மாண்டனர். விக்டோரியாவில் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டதும் மக்கள் அம்மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரமுடியும்.
இதுவரை பயணத் தடை இருந்து வந்துள்ளது. விக்டோரியாவில் பெரியவர்களில் இதுவரை குறைந்தது 73.7 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் குறைந்தது 91.2 விழுக்காட்டினர் ஒரு முறையாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் திரு ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் 90 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட்ட பிறகு பெரும்பாலான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அம்மாநிலம் வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியளவில் இந்த இலக்கை எட்ட முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 11ஆம் தேதியன்று நியூ சவுத் வேல்ஸில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

