தாய்மையின் ஆனந்தமான தருணங்களைப் பறைசாற்றும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளியில், பிறந்த குழந்தை ஒன்று தன் பிஞ்சுக் கைகளால் தன் தாயின் முகத்தை அணைத்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது..
இந்த அழகிய தருணத்தை அனுபவிக்கும் விதமாக, அதன் தாயார் கண்களை மூடிக்கொள்கிறார்.
இரண்டே நாள்களில் அந்தக் காணொளி 500,000க்கும் அதிகமான பார்வைகளையும் 18,000 விருப்பக்குறிகளையும் பெற்றுள்ளது. அந்தக் காணொளியைக் கண்டு இணையவாசிகள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
"தம் குழந்தைக்காக தாயார் தமது மகிழ்ச்சியைத் தியாகம் செய்கிறார். தாயார் கவனித்துக்கொள்வதைப்போல பிள்ளைகளை வேறு எவராலும் பார்த்துக்கொள்ள இயலாது," என்று சஹில் சவி எனும் பயனாளர் பதிவிட்டுள்ளார்.
பார்த்தா எனும் வெறொரு பயனாளர், "குழந்தைக்கும் தாயாருக்கும் இடையிலான இந்தப் பாசத்தை வேறு எதனாலும் வெல்ல முடியாது," என்று கூறியிருக்கிறார்.
குழந்தைக்கும் அதன் தாயாருக்கும் இடையேயான பிணைப்பு மிகவும் வலுவானது என்று கார்லோஸ் ஃபல்காவ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காணொளி எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

