ஹனோய்: மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நிலங்களைத் தயார்நிலையில் வைப்பதைத் துரிதப்படுத்தவும் சொத்து, உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு இடையூறில்லாமல் இருக்கச் செய்யவும் வியட்னாம் அதன் சட்டத்தில் திருத்தங்களைச் செய்துள்ளது.
அந்தச் சட்டத் திருத்தங்களுக்கு வியட்னாமிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. பல ஆண்டுகளுக்கு இரு எண் விதிக அளவு பொருளியல் வளர்ச்சியை எட்டுவது வியட்னாமின் இலக்காகும். அதையொட்டி அது இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
விலையைத் தீர்மானிக்கும் முறை
திருத்தப்பட்டுள்ள சட்டத்தின்படி நிலங்களுக்கு விலையைத் தீர்மானிக்கும் முறை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. விலையைத் தீர்மானிக்கும் முறை எளிதாக்கப்பட்டதோடு வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது என்று சனிக்கிழமை (நவம்பர் 21) நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்காக நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அறிக்கை வெளியிடப்பட்டது.
மேம்பாட்டுத் திட்டங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க அரசாங்கம் நிலத்தை எடுத்துக்கொள்ளும்போது நிலைமைக்கு ஏற்றவாறு, நியாயமாக, வெளிப்படையாக, சரியான நேரத்தில் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்குச் சேரவேண்டிய தொகை வழங்கப்படுவதையும் அவர்கள் சரியாக இடம் மாற்றப்படுவதையும் மாற்றப்பட்டுள்ள சட்டம் உறுதிசெய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில திட்டங்களுக்கு சம்பந்தப்பட்டோரிடம் வழங்கவேண்டிய தொகையை வழங்குவதற்கும் அவர்களை இடம் மாற்றுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்னரே நிலங்களைத் தயார்ப்படுத்தத் தொடங்குவதற்குப் புதிய சட்டம் வகைசெய்கிறது. தேசிய அளவில் முக்கியமான திட்டங்களும் உடனடியாக முதலீடு செய்யவேண்டிய அரசாங்கத் திட்டங்களும் அவற்றில் அடங்கும். சம்பந்தப்பட்ட நிலத்துக்கு அதைப் பயன்படுத்தும் 75 விழுக்காட்டினர் ஆதரவளிக்கும் திட்டங்களுக்கும் இது பொருந்தும்.
பொருளியல் வளர்ச்சி இலக்கு
இவ்வாண்டு குறைந்தது 10 விழுக்காட்டுப் பொருளியல் வளர்ச்சிகாணும் இலக்கை வியட்னாம் கொண்டுள்ளது. 2045ஆம் ஆண்டுக்குள் உயரிய வருமான நாடாக உருவெடுக்கும் நோக்கில் அது உள்கட்டமைப்பில் அதிகம் செலவு செய்தும் வருகிறது.
ஒப்புதல் பெறுவதற்கு நெருக்குதலாக இருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றவும் நில வளங்களைப் பயன்பாட்டுக்கு விடவும் சட்டத் திருத்தங்கள் கைகொடுக்கும் என்று வியட்னாமிய அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது. விலையைத் தீர்மானிக்கும் முறையை மாற்றியமைப்பது, விலை விவரங்களைக் கொண்டு, வெளிப்படையாக வரையப்படுவதை உறுதிசெய்யும் என்றும் அதேவேளை விலையை இயல்பற்ற வழிகளில் மாற்றுவதைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
