தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடற்படை அணிவகுப்புடன் 80வது தேசிய தினத்தைக் கொண்டாடிய வியட்னாம்

1 mins read
76bc23a7-1bc1-4305-8d81-1910e7909dc9
போர்க் கப்பல்கள், கடலோரக் காவல்படை பயன்படுத்தும் படகுககள் ஆகியவற்றுடன் ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலும் அணிவகுப்பில் இடம்பெற்றன. - படம்: வியட்னாமியக் கடற்படை

கான் ஹுவா: வியட்னாம் அதன் 80வது தேசிய தினத்தை செவ்வாய்க்கிழமை (2 செப்டம்பர்) கொண்டாடியது.

தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது வியட்னாம் அதன் கடற்படையின் பலத்தைக் காட்சிப்படுத்தியது.

தலைநகர் ஹனோயிலிருந்து ஏறத்தாழ 1,100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காம் ரான் விரிகுடாவில் உள்ள ஆழமான கடற்பகுதியில் கடற்படை அணிவகுப்பை நடத்தியது.

போர்க் கப்பல்கள், கடலோரக் காவல்படை பயன்படுத்தும் படகுகள் ஆகியவற்றுடன் ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலும் அணிவகுப்பில் இடம்பெற்றன.

நீர்மூழ்கிக் கப்பலின் மேற்பரப்பில் உள்ள பிரதான தளமேடையில் சீருடை அணிந்த அதிகாரிகள் அணிவகுத்து நிற்க, அவர்களுக்கு மேல் ஹெலிகாப்டர்கள் பறந்து சென்றன.

வியட்னாமியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களைப் பார்த்து பொதுமக்கள் பலர் மகிழ்ச்சி அடைந்தனர்.

வியட்னாமியக் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல், போர்க் கப்பல்கள், விமானங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை

கடந்த பத்தாண்டுகளாக வியட்னாம் அதன் கடற்படையின் ஆற்றலை மேம்படுத்தி வருகிறது.

தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள கடற்படையைப் பலப்படுத்தும் பணியில் வியட்னாம் தீவிரம் காட்டி வருகிறது.

2009ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை ஏறத்தாழ 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வியட்னாம் வாங்கியது. 2017ஆம் ஆண்டிலிருந்து அந்த நீர்மூழ்கிக் கப்பல்களை அது பயன்படுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்