ஹோ சி மின்: வியட்னாமின் குழந்தைப் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளில் குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் அதுவும் ஒன்று.
எனவே, தனது இரு குழந்தைகள் கொள்கையைத் தளர்த்துவது குறித்து அந்நாடு பரிசீலித்து வருகிறது.
எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுப்பது, ஒவ்வொரு குழந்தைப் பிறப்புக்கும் இடையிலான கால இடைவெளி ஆகியவற்றை முடிவெடுக்கும் உரிமையை வியட்னாமியத் தம்பதியரிடமே விட்டுவிடக் கோரி வியட்னாமிய சுகாதார அமைச்சு பரிந்துரையை முன்வைத்துள்ளது.
வியட்னாமின் குழந்தைப் பிறப்பு விகிதத்தைவிட புருணை, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதத்துக்கு வேலை தொடர்பான அழுத்தங்கள், நிதி நெருக்கடி, வாழ்க்கைத் தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துதல், மாறிவரும் சமுதாயப் பார்வை ஆகியவை காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
1999லிருந்து 2022ஆம் ஆண்டு வரை குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து சீராக இருந்ததாக வியட்னாமிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அது மிக விரைவாக வீழ்ச்சி கண்டது என்றும் 2024ஆம் ஆண்டில் ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.91 குழந்தைகள் எனும் நிலை பதிவானது என்றும் அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அதுவே வியட்னாமிய வரலாற்றில் ஆகக் குறைவான குழந்தைப் பிறப்பு விகிதம் என்று தெரிவிக்கப்பட்டது.

