ஹனோய்: வியட்னாமில் நடந்து முடிந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 97 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) வெளியிட்டுள்ள முடிவுகள் காட்டுகின்றன.
ஆளும் ராணுவ ஆட்சியாளர்களே அதிக வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் நிறுத்தியிருந்தனர். மொத்தம் உள்ள 500 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி 482 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளூர் ஆட்சி மன்றங்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் இந்த முறை 99 விழுக்காடு மக்கள் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே அவையாக இயங்கும் நாடாளுமன்றத்துக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த முடிவையும் மாற்றும் அதிகாரம் இல்லை. அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் சட்டங்களில் திருத்தங்களைச் செய்ய மட்டும் அதனால் முடியும்.
பல வாரங்களுக்கு நீடிக்கும் வியட்னாமின் தேசிய சட்டமன்றக் கூட்டம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. அக்கூட்டத்தில் அதிபர், பிரதமர் உட்பட நாட்டின் புதிய தலைவர்களைக் கட்சி நியமனம் செய்யும்.
அருகில் உள்ள அண்டை நாடான சீனாவைப் போலவே, வியட்னாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

