ஹனோய்: வெளிநாடுகளில் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டிய பணத்தை வியட்னாமுக்குக் கொண்டுவர முயன்ற ஐவரைக் கைது செய்திருப்பதாக அந்நாட்டுக் காவல்துறை கூறியுள்ளது.
கிட்டத்தட்ட S$1.6 பில்லியனைக் கொண்டுவர முயன்றபோது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் அந்தக் குற்றக்கும்பலை ஒடுக்கியதாகவும் அது கூறியது.
அந்தக் குற்றக்கும்பலில் வங்கி ஊழியர்களும் அடங்குவர்.
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையே அந்தக் குற்றக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அடையாள அட்டைகளையும் வங்கி முத்திரைகளையும் போலியாகத் தயாரித்து, அவற்றைப் பயன்படுத்தி 187 வர்த்தக நிறுவனங்களை நிறுவியதுடன் 600க்கு மேற்பட்ட நிறுவன வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகக் கூறப்பட்டது.
வெளிநாடுகளில் மோசடி, சூதாட்டம் போன்றவற்றின் மூலம் ஈட்டிய பணத்தை நல்ல பணமாக மாற்றி, அனுப்புவதற்கு அந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகக் காவல்துறை புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில் கூறியது. மொத்தம் ஏறக்குறைய 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் அவ்வாறு அனுப்பப்பட்டதாக அது குறிப்பிட்டது.
டானாங்கில் கைது செய்யப்பட்டோரில் வங்கி ஊழியர் ஒருவரும் அடங்குவார். நிறுவனப் பதிவுச் சான்றிதழ்கள் 40, போலியான முத்திரைகள் 122 ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.