வியட்னாமில் டன் கணக்கில் கைப்பற்றப்பட்ட போலிக் காப்பி

காப்பிக் கொட்டைகளுக்குப் பதில் சோயாபீன்ஸ்

வியட்னாமில் டன் கணக்கில் கைப்பற்றப்பட்ட போலிக் காப்பி

2 mins read
31963d50-edda-480e-ab4d-4e4ccf262558
வியட்னாமில் காவல்துறையினர் நடத்திய திடீர்ச் சோதனையைத் தொடர்ந்து, காப்பிக் கொட்டைகளுக்கு மாற்றாக சோயாபீன்ஸ்களிலிருந்து போலிக் காப்பியைத் தயாரித்து வந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஹனோய்: வியட்னாமில் காவல்துறையினர் இவ்வாரத் தொடக்கத்தில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, காப்பிக் கொட்டைகளுக்கு மாற்றாக சோயாபீன்ஸ்களிலிருந்து போலிக் காப்பியைத் தயாரித்து வந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்விவகாரத்தில்  போலிக் காப்பியைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கிடங்கில், வியட்னாம் காவல்துறை குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய ஹைலேண்ட்ஸ் மாகாணமான லாம் டோங்கில் நடந்த இந்தச் சோதனையின் போது 4.1 டன் போலி காப்பிப் பொருள்கள் உள்பட, அதன் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட 3 டன் மூலப்பொருள்களையும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அமைச்சு ஜனவரி 30ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘ரோபஸ்டா காப்பி’ தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக வியட்னாம் உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. கசப்பான சுவை கொண்டதும், குறிப்பாக உடனடி காப்பி தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. 

இதற்கிடையே, இக்குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்த கிடங்கின் உரிமையாளர் லுவாங் வியட் கீம்,  உள்ளூர் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரைத்த காப்பித் தூளை உற்பத்தி செய்வதற்காகவும் தனது நிறுவனம் சோயாபீன்ஸ் மற்றும் சுவையூட்டிகளைக் காப்பிக் கொட்டைகளுடன் கலந்து தயாரித்ததாக, காவல்துறையிடம்  ஒப்புக்கொண்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) 1,056 பைகளில், ஏறத்தாழ 528 கிலோகிராம் எடையுள்ள காப்பி சார்ந்த தயாரிப்புகளை ஏற்றிச் சென்ற லாரியை அதிகாரிகள் சோதனை செய்ததைத் தொடர்ந்து, இந்த செயல் வெளியே தெரிந்தது.

அப்போது மேற்கொள்ளபட்ட விசாரணையில், எந்த ஆவணங்களும் இல்லாமல் கிடங்கில் இந்தத் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்ததாகக் கண்டறியப்பட்டது என்றும் காவல்துறை கூறியது. 

இந்த மோசடி தொடர்பில், கிடங்கு அமைந்திருக்கும் அண்டை மாகாணமான டக் லக் வட்டாரத்தைத் சேர்ந்த காப்பி வர்த்தகர் குவென் குவாங் தோ, “போலிக் காப்பிக் பொருட்கள் அரிதானவை அல்ல; அவை சோயாபீன் அல்லது சோளத்திலிருந்தும் அல்லது இவை இரண்டிலிருந்தும் கூட தயாரிக்கப்படலாம்” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

“சோயாபீன்ஸ், சோளம் உண்ணக்கூடியவை. மேலும், அசல் காப்பிக் கொட்டைகளைவிட அவை மிகவும் மலிவானவை. ஆனால் இந்தப் போலியான காப்பி பொருட்களைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா என்று யாருக்குத் தெரியும்,”  என்று மேலும் கேள்வி எழுப்பினார் திரு குவென் தோ. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்