தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

14,000 கைதிகளை விடுதலை செய்யவிருக்கும் வியட்னாம்

1 mins read
9b2c0804-6dda-4d1f-9bb2-0f21db98a545
செப்டம்பர் 2ஆம் தேதி தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வியட்னாம் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சிறைக் கைதிகளை விடுதலை செய்யவிருக்கிறது. - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளிநாட்டினர் உள்ளிட்ட 14,000 சிறைக் கைதிகளைச் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கவிருப்பதாக வியட்னாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அறிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கைதிகளை வியட்னாம் விடுதலை செய்கிறது.

கம்யூனிச நாடான வியட்னாம் முக்கிய நிகழ்வுகளுக்கு முன் பொது மன்னிப்பை அறிவிப்பது வழக்கம். சைகோன் நகர் வீழ்ச்சியின் 50ஆம் ஆண்டு நிறைவை அனுசரித்த வியட்னாம், ஏப்ரல் மாதத்தில் 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுவித்தது.

செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து வியட்னாமிய அதிகாரிகள், தண்டனை அனுபவிக்கும் 13,915 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கவிருக்கின்றனர் என்று பிரதமர் அலுவலகத்தின் திரு சான் டின் டாய் கூறினார்.

விடுவிக்கப்படவிருக்கும் கைதிகளில் சீனா, தென்கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 18 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 66 வெளிநாட்டினரும் அடங்குவர்.

பொதுப் பாதுகாப்புக்கான துணையமைச்சர் லே வான் துயென், “இவ்வாண்டுதான் ஆக அதிக எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்,” என்றார்.

வியட்னாமிய சட்டத்தின்படி அரசாங்கத்தைக் கவிழ்க்க முற்பட்டோர் அல்லது பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டோர் பொது மன்னிப்புக்குத் தகுதிபெற மாட்டார்கள்.

2009ஆம் ஆண்டிலிருந்து வியட்னாம் கிட்டத்தட்ட 100,000 கைதிகளை அவர்கள் தண்டனை காலம் முடிவதற்குள் விடுதலை செய்துள்ளது. எனினும், அரசியல் ஆர்வலர்கள் அதில் சேர்க்கப்படவில்லை.

வியட்னாம் சிறைச்சாலைகளில் 190,000க்கும் அதிகமான கைதிகள் உள்ளதைப் பொது பாதுகாப்பு அமைச்சு சுட்டியது.

பிரெஞ்சு காலனித்துவத்திலிருந்து விடுதலையாகி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை செப்டம்பர் 2ஆம் தேதி வியட்னாம் அணிவகுப்புடன் கொண்டாடவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்