ஹனோய்: வருமானவரித் துறையை மின்னிலக்க வடிவில் மறுசீரமைத்து இயங்காத வர்த்தகங்களை முறையாக ரத்து செய்யும் நடவடிக்கையில் வியட்னாம் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆயினும் பலரையும் அது பாதித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் வர்த்தகங்களை நிர்வகித்த வியட்னாமியர்கள் அவற்றின் பதிவுக் குறியீடுகளை வர்த்தகம் நிறுத்தப்பட்டபோதே ரத்து செய்யாத காரணத்தால் தற்போது வரை செயல்படாத நிறுவனங்களுக்குத் தொடர்ந்து வரி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதை வெளிநாடுகளுக்குச் செல்லும் முன் விமான நிலையங்களில் அதிகாரிகள் கண்டறிந்து வர்த்தக வரி செலுத்தாதோர் பயணம் செய்யத் தடை விதித்தனர்.
மீண்டும் நிலுவையிலுள்ள வரிக்கட்டணங்களைச் செலுத்திய பிறகே அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு வர்த்தகத்தைத் தொடங்கிய பின் அதை மூடும் நிலையில், கட்டாயமாக அதன் வர்த்தகக் குறியீட்டையும் (டிஐஎன்) ரத்து செய்ய வேண்டும் என்பதைப் பலர் தற்போதுதான் உணர்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட வர்த்தகங்களால் ஏற்பட்ட பயணத் தடைகள் குறித்து பலர் சமூக ஊடகங்களில் கவலையுடன் பதிவிட்டனர்.
வியட்னாமின் வருமானவரித் துறை 600,000க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் முறையாக வரிக்குறியீடுகளை ரத்து செய்யத் தவறியதாகத் தெரிவித்துள்ளது. வர்த்தக வரிக் குறியீடுகள் ரத்து செய்யப்படாததோடு பதிவுசெய்யப்பட்ட முகவரிகளில் பலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அத்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு மே மாதம் முதல் நாடுதழுவிய நிலையில் இயங்காத வர்த்தகங்களை முழுவதுமாக நீக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை முடுக்கிவிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வரிகளை மீட்கவும் வர்த்தகத்தை மூடும் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் அந்நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது. நிதி அமைச்சு அக்டோபர் 6ஆம் தேதி நடத்திய சந்திப்புக் கூட்டத்தில், வரித்துறையின் தலைவர் லெ லொங் இதுவரை மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்ட நிறுவனங்களை ரத்து செய்துவிட்டதாகக் கூறினார்.
மின்னிலக்க முறைக்கு மாறுவதை உறுதி செய்யும் வகையில் இவ்வாண்டின் இறுதிக்குள் இத்திட்டம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
