வியட்னாம்: பெட்ரோல் நிலையத்தில் கார் தீப்பிடித்து இளையர் இருவர் உயிரிழப்பு

வியட்னாம்: பெட்ரோல் நிலையத்தில் கார் தீப்பிடித்து இளையர் இருவர் உயிரிழப்பு

படம்: லேபரர்ஸ் நாளிதழ்

02 May 2026 - 4:37 pm

1 mins read

ட நாங்: பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பியபோது கார் தீப்பற்றி எரிந்ததில் இளையர் இருவர் உயிரிழந்தனர்.

இவ்விபத்து வியட்னாமின் மத்திய நகரான ட நாங்கில் வெள்ளிக்கிழமை (மே 1) பிற்பகலில் நேர்ந்தது.

து கேம் எனும் சிற்றூரில் இருந்த அந்த பெட்ரோல் நிலையத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் கார் தீப்பற்றியதாக ‘தாங் டியன் மக்கள் குழு’வின் தலைவர் டுருவோங் கோங் கோங் சோன் தெரிவித்தார்.

ஐவர் அமர்ந்து செல்லக்கூடிய அந்த காருக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியதாகவும் அது மளமளவென கார் முழுமைக்கும் பரவியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு இயந்திரத்திற்கும் தீ பரவியது.

காரின் பின்னிருக்கையில் இருவர் நிகழ்விடத்திலேயே மாண்டுவிட்டது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் முறையே 16 மற்றும் 17 வயது இளையர் எனத் தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோல் நிலைய ஊழியர்களும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் தீயை அணைக்கப் போராடியும் அவர்களது முயற்சி பயனளிக்கவில்லை.

தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்புப் படையினர் கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

கார் முற்றிலுமாகத் தீக்கிரையானது. பெட்ரோல் நிலையத்தின் எரிபொருள் நிரப்பு இயந்திரங்களில் ஒன்று பெரிதும் சேதமடைந்தது.

விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்பெட்ரோல் நிலையம்எரிபொருள்கார்தீ