ஹனோய்: தடையற்ற வர்த்தகத்துக்கான ஐரோப்பியச் சங்கமும் (இஎஃப்டிஏ) வியட்னாமும் புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) அதிகாரபூர்வமாகக் கையெழுத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கச் சுங்கவரிகள் தொடர்பான உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில், நீண்டகாலமாகத் தடைபட்டிருந்த இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிச்டென்ஸ்டைன் ஆகிய நான்கு நாடுகளைக் கொண்ட இஎஃப்டிஏ சங்கத்துடன் வியட்னாம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவுசெய்தது. அந்தப் பேச்சுவார்த்தை 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்துப் பொருளியல் அமைச்சர் கை பர்மெலின் முன்னிலையில் இந்த உடன்பாடு கையெழுத்தாகவுள்ளது.
பொருள்களின் உற்பத்தி மூலவிதிகள், முதலீடு, அறிவுசார் சொத்துரிமை, போட்டித்தன்மை, வர்த்தகத் தீர்வுகள், அரசாங்கக் கொள்முதல் போன்ற பல முக்கிய அம்சங்களை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்னாமிய வெளியுறவு அமைச்சு இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.
இதனிடையே, செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாதச் சந்தேகத்தின்பேரில் நார்வே நாட்டவர், ஆஸ்திரேலியர் உட்பட மூவரை வியட்னாமிய அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வியட் டான் அமைப்பைச் சேர்ந்த இவர்கள், கம்போடியாவிலிருந்து எல்லை கடந்து சட்டவிரோதமாக வியட்னாமுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கம்போடியாவில் கடத்தப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியபோதிலும், இக்கைது நடவடிக்கை திட்டமிடப்பட்ட தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என ஹனோய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவருக்குத் தூதரக உதவி வழங்குமாறு நார்வே வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
