உலகின் ஆகப் பெரிய விளையாட்டரங்கை அமைப்பதில் வியட்னாம் நிறுவனம் தீவிரம்

உலகின் ஆகப் பெரிய விளையாட்டரங்கை அமைப்பதில் வியட்னாம் நிறுவனம் தீவிரம்

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

11 Jun 2026 - 3:59 pm

2 mins read

ஹனோய்: வியட்னாமின் ‘வின்குரூப்’ நிறுவனம் ஹனோய் நகரில் 135,000 இருக்கைகளுடன் கூடிய, உலகின் ஆகப் பெரிய விளையாட்டரங்கிற்கான கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

தலைநகர் ஹனோய்க்குத் தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமையும் அந்த அரங்கிற்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். அப்பணிகளைத் திட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னதாகவே, அதாவது 2027 ஜூலைக்குள் முடிக்க வின்குரூப் இலக்கு வகுத்துள்ளது.

வியட்னாமின் பாரம்பரிய வெண்கல முரசின் நினைவாக அவ்வரங்கிறகு ‘டிராங் டோங் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது, 9,000 ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள ‘ஒலிம்பிக் விளையாட்டு நகரம்’ என்ற 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அவ்வரங்கம் உலகின் மிகப் பெரிய, முழுமையாகத் திறந்து மூடக்கூடிய கூரையைக் கொண்டிருக்கும்.

இந்நிலையில், வியட்னாமின் உள்நாட்டுக் காற்பந்துப் போட்டிகளுக்குச் சராசரியாக 6,000க்கும் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே வரும் நிலையில், இவ்வளவு பெரிய அரங்கம் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டில் வின்குரூப் நிறுவனத்தின் ஒட்டுமொத்தக் கடன் 36.7 பில்லியன் டாலராக இருந்தது. இது நாட்டின் ஒட்டுமொத்தத் தனியார்துறைக் கடனில் நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமாகும்.

இருப்பினும், 2030ஆம் ஆண்டிற்குள் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள்மூலம் நாட்டின் பொருளியல் வளர்ச்சியைக் குறைந்தது 10 விழுக்காடாகத் தக்கவைக்க வியட்னாமை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. விமான நிலையங்கள், கடல் துறைமுகங்கள், பாலங்கள், ரயில்வே மேம்பாடு போன்றவை அந்த உள்கட்டமைப்புத் திட்டங்களில் அடங்கும்.

வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் உள்ள ரன்கிராடோ அரங்கமே உலகின் ஆகப் பெரிய அரங்கம் என்று அனைத்துலக ஒலிம்பிக் மன்றத் தரவுகள் குறிப்பிடுகின்றன. அவ்வரங்கில் 150,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்துக் கேள்வி எழுப்பியுள்ள பார்வையாளர்கள் சிலர், அங்கு 120,000க்கும் குறைவான இருக்கைகளே இருப்பதாகக் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்அரங்கம்கட்டுமானம்