ஹனோய்: வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டோ லாம் இவ்வாரம் வடகொரியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வார் என்று வியட்னாமிய அரசாங்கமும் வடகொரிய அரசாங்க ஊடகமும் திங்கட்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தன.
வியட்னாமியத் தலைவர் ஒருவர் வடகொரியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வது 18 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) வடகொரிய ராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இவ்வேளையில் திரு லாமின் பயணம் அமைகிறது.
வடகொரியாவின் ஆளும் பாட்டாளிக் கட்சி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது. திரு லாமின் பயணம் வரும் வியாழக்கிழமை (அக்டோர் 9) தொடங்கும் என்று ஹனோய் கூறியது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் அழைப்பை ஏற்று திரு லாம் இப்பயணத்தை மேற்கொள்வதாக வியட்னாமிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. வடகொரிய அரசாங்கம் நடத்தும் ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்ட தகவலை அமைச்சு உறுதிப்படுத்தியது.
திரு லாமுடன் வியட்னாமிய தற்காப்பு அமைச்சர் ஃபான் வான் கியாங்கும் வடகொரியா செல்வார் என்று வியட்னாமிய அதிகாரி ஒருவர் சொன்னார்.
இதற்கு முன்பு கடைசியாக 2007ஆம் ஆண்டில்தான் வியட்னாமியத் தலைவர் ஒருவர் வடகொரியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.