லிபியாவில் வன்முறை வெடித்தது

1 mins read
28a4cb30-062c-4a40-889b-0291db06fe96
லிபியத் தலைநகர் திரிப்பொலியின் மையப் பகுதியிலும் மற்ற பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். - படம்: பிக்சபே

திரிப்பொலி: லிபியாவில் ஆயுதம் தாங்கிய பல அமைப்புகள் உள்ளன.

அவற்றில் ‘சப்போர்ட் ஃபோர்ஸ் அப்பரேட்டஸ்’ எனும் அமைப்பும் ஒன்று.

எஸ்எஸ்ஏ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு லிபியாவின் அதிபர் மன்றத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், எஸ்எஸ்ஏ அமைப்பின் தலைவரான அப்துல்கனி கிக்லி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கு இடையே சண்டை மூண்டுள்ளது.

லிபியத் தலைநகர் திரிப்பொலியின் மையப் பகுதியிலும் மற்ற பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு லிபிய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியதை அடுத்து, சாலைகளில் இருந்த வாகனங்கள் வீடு நோக்கி விரைந்தன.

எஸ்எஸ்ஏ அமைப்பின் தலைமையகம் இருக்கும் அபு சலீம் பகுதி லிபியத் தற்காப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வன்முறை காரணமாக வகுப்புகள், தேர்வுகள், இதர பணிகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திரிப்பொலி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் நிறுவன அலுவலகம், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறு அது கேட்டுக்கொண்டது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் போருக்குச் சமம் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்