கோலாலம்பூர்: அனைத்துலக மோசடிக் கும்பல்கள் மலேசியாவை ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கு அங்குள்ள விசா விலக்கு நடைமுறை ஒரு காரணமாக இருக்கலாம் என்று மலேசியக் காவல்துறைத் தலைவர் முகமது காலிட் இஸ்மாயில் கூறியுள்ளார்.
மலேசியாவில் மோசடிகள் தொடர்பாக இம்மாதம் 6, 7ஆம் தேதிகளில் 187 சந்தேக நபர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 58 மில்லியன் அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் நாட்டுக்குள் எவ்வாறு நுழைந்தனர் என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது என்ற திரு இஸ்மாயில், முதற்கட்ட சோதனைகளில் வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் அனைவரும் உரிய பயண ஆவணங்களை வைத்திருந்ததைக் குறிப்பிட்டார்.
மலேசியக் குடிநுழைவுத் துறை இணையத்தளத்தின்படி ஆசியான் நாடுகளிலிருந்து வந்து மலேசியாவில் ஒரு மாதம்வரை தங்க விரும்புவோருக்கு விசா தேவையில்லை. மியன்மாரிலிருந்து வருவோருக்கு மட்டும் அது பொருந்தாது.
சீனாவிலிருந்து வருவோர் கூடுதலாக ஐந்தாண்டுவரை விசா இன்றி மலேசியாவிற்குள் நுழையலாம் என்ற நடைமுறையை மலேசியாவும் சீனாவும் கடந்த மாதம் அறிவித்தன. மலேசியாவிலிருந்து சீனா செல்வோருக்கும் அது பொருந்தும்.
அவ்வாறு விசா இன்றி நாட்டுக்குள் நுழையும் சீன நாட்டவர் 90 நாள்கள்வரை மலேசியாவில் தங்க முடியும்.
மலேசியக் காவல்துறை, குடிநுழைவுப் பிரிவுடனும் பிற அமலாக்க அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றுவதாகத் திரு இஸ்மாயில் சொன்னார்.
இந்தோனீசியா, சட்டவிரோத சூதாட்டத்திற்காகவும் மோசடிகளுக்காகவும் அண்மையில் 500க்கும் அதிகமான வெளிநாட்டினரைக் கைதுசெய்தது. அதையடுத்து தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தோருக்கான விசா விலக்குக் கொள்கையை மறுஆய்வு செய்யப்போவதாக இந்தோனீசிய அதிகாரி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டோர் வியட்னாம், கம்போடியா, மலேசியா, லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் சீனாவையும் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், மலேசியாவில் மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவோர் முதலீட்டு மோசடி, காதல் மோசடி, சூதாட்ட நடவடிக்கை ஆகியவற்றில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டோர் ஹாங்காங், சீனா, தென்கொரியா, ஜப்பான், ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மலாய் மெயில் நாளேடு சொன்னது.

