ஒஹாயோ: உயிரியல் தொழில்நுட்பத் தொழில்முனைவரும் முன்னாள் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஒஹாயோ மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 24) அறிவித்தார்.
தொழில்துறையில் முன்னணி வகிக்கும் அமெரிக்க மாநிலங்களில் ஒஹாயோவை இடம்பெறச் செய்வதே தமது இலக்கு என்றும் அதை நோக்கித் தீவரமாகச் செயல்படப்போவதாகவும் திரு விவேக் சூளுரைத்தார்.
வெஸ்ட் செஸ்டர் நகரத்தில் உள்ள விண்வெளித்துறை நிறுவனத்துக்குச் சொந்தமான நிலையம் ஒன்றில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோரிடம் திரு விவேக் பேசினார்.
ஒட்டுமொத்த அமெரிக்காவுக்காக அதிபர் டிரம்ப் செயல்பட்டு வருவதைத் திரு விவேக் சுட்டினார்.
அந்த வகையில் அவருக்கு ஆதரவு வழங்கவும் அமெரிக்காவின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறினார்.
அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“இதைத் தனிநபரால் செய்து முடிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். அமெரிக்காவின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதை மாநில அளவிலிருந்து தொடங்க வேண்டும்,” என்றார் 39 வயது திரு விவேக்.
வரி குறைப்பு, கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக அவர் உரையாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் உள்ள முக்கியமான கட்சிகள் கல்விக்கு போதுமான அளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று திரு விவேக் அதிருப்திக் குரல் எழுப்பினார்.
ஒஹாயோவின் ஆளுநராகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் பள்ளிகளில் கைப்பேசி பயன்பாடு தடை செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
ஒஹாயோ ஆளுநர் தேர்தல் 2026ஆம் ஆண்டில் நடைபெறும்.
அதற்கான வேட்பாளரை அதிபர் டிரம்ப் இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனால் வேட்பாளராக திரு விவேக்கை நியமிக்க தற்போதைய ஆளுநரான திரு மைக் டிவைனிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் துணை ஆளுநரான திரு ஜோன் ஹஸ்டட்டை திரு டிவைன் தேர்வு செய்தார்.
தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஒஹாயோ மாநிலப் பொருளாளர் திரு ராபர்ட் ஸ்பிராக்கும் மாநில தலைமைச் சட்ட அதிகாரி திரு டேவ் யோஸ்ட்டும் விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிறகு அறிவித்த திரு ஸ்பிராக், திரு விவேக்கிற்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.